நெல்லையில் பருவமழையால் ஸ்ரீபுரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்

நெல்லை : நெல்லையில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் நெல்லை டவுன் – சந்திப்பு இடையே சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபுரம் வடக்கு பகுதியில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் பழுதடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை சுற்றி உள்ள குண்டு குழி சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தட்டு தடுமாறி இயக்கப்படுகிறது. பஸ்களில் ஏறிச்செல்ல பயணிகளும் மழைநீர் நிரம்பிய குண்டு குழிகள் தெரியாமல் கீழே விழுந்து செல்லும் அவலமும் காணப்படுகிறது.

நெல்லை டவுன் – சந்திப்பு இடையான சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபுரத்தில் இருந்து ஊருடையார்புரம் திரும்பும் சாலையில் பல லட்ச ரூபாய் செலவில் கழிவு
நீரோடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஓடை பகுதியில் கழிவுகள் தேங்கி தண்ணீர் செல்லமுடியாமல் தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி இரவு பெய்த பலத்த மழை காரணமாக அதிகப்படியான கழிவுநீர், கால்வாய் மூலம் வெளியேற முடியாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

அப்பகுதி சாலையும் குண்டு குழியாக காணப்படுவதால் ஸ்ரீபுரம் பகுதியை கடந்து ஊருடையார்புரம் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். சாலை மற்றும் கழிவுநீர் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை உடனடியாக சீரமைத்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post நெல்லையில் பருவமழையால் ஸ்ரீபுரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் appeared first on Dinakaran.

Related Stories: