டி.எஸ்.சீனிவாசன் நூற்றாண்டு விழா அரசு, தனியார் இணைந்து தொழில்துறையை வளர்க்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: தொழில் துறையை பொறுத்தவரை அரசு துறையும், தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். சென்னையில் நேற்று நடந்த டிவிஎஸ் குழுமத்தின் டி.எஸ்.சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் தொழில்துறை அடையாளங்களில் டிவிஎஸ் முக்கியமானது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் தொழில் மேதைகளில் ஒருவரான டி.வி.சுந்தரம். 1912ம் ஆண்டு மதுரையை மையமாக கொண்டு பேருந்து சேவையை தொடங்கினார். பேருந்து இயக்குவது – பாகங்களை தயாரிப்பது – வாகனங்களை உருவாக்குவது போன்ற கிளைத் தொழில்கள் எல்லாவற்றையும் தொடங்கியதால்தான், இன்றைக்கு 80 நாடுகளில் டி.வி.எஸ் நிறுவனம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. டி.வி.சுந்தரம் போலவே அவருடைய மகன் சீனிவாசனும் இந்த தொழிலில் புதுமைகளை புகுத்தி விரிவுபடுத்தினார். சீனிவாசன் மகன் வேணு சீனிவாசனும் இதை இன்னும் சிறப்பாக செய்துகொண்டு வருகிறார். வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். அதற்கு அடையாளமாக டி.வி.எஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது. வாரிசு என்று சொல்வதால் ஏதோ அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க தேவையில்லை. வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்து வெற்றிக்கொடி நாட்டலாம் என்றுதான் சொன்னேன்.

‘நம்ம ஊர் பள்ளி’ என்கிற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்தேன். சமூக சேவை எண்ணம் கொண்டவர்களுடைய முயற்சியையும் இணைத்துக் கொண்டு அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலமாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான் நோக்கம். வேணு சீனிவாசனும், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தும் இந்த தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். திட்டத்தை நான் தொடங்கிய முதல் நாளே ரூ.50 கோடி மதிப்பிலும், இப்போது ரூ.158 கோடி மதிப்பிலும் கொடைகள் வந்திருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறி வருகிறது. அதிலும் குறிப்பாக, தொழில் துறையில் அதிவேக முன்னேற்றத்தை கண்டு வருகிறது. ஏராளமான புதிய புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஏறத்தாழ 10 விழுக்காடு அளவுக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு இருக்கிறது. 2024 ஜனவரி மாதம் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இப்படி எங்கேயும் நடந்ததில்லை என்று புகழப்படுகிற அளவிற்கு நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். டி.வி.எஸ். போன்ற நிறுவனங்கள் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

தொழில் துறையை பொறுத்தவரை, அரசு துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும். டி.வி.எஸ் போன்ற புதிய, புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்பி, எம்எல்ஏக்கள், டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், மாநில திட்டக்குழு உறுப்பினர் மல்லிகா சீனிவாசன், டிவிஎஸ் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள், பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், இந்து ராம், செயல் இயக்குநர் லட்சுமணன், தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

The post டி.எஸ்.சீனிவாசன் நூற்றாண்டு விழா அரசு, தனியார் இணைந்து தொழில்துறையை வளர்க்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: