ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் உறுதி தான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற திமுகவின் மூத்த முன்னோடி ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் பேசியதாவது: விருதுநகர் என்பதே நீதிக்கட்சியின் கோட்டையாக இருந்த நகரம், அங்கிருந்து உருவானவர்தான் ஆசைதம்பி. அவர் படைத்த ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புத்தகம் வகுப்பு வாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது.

கைது செய்யப்பட்ட ஆசைத்தம்பியை சிறையில் இருந்து விடுவிப்பதற்கு முன்கட்டாயப்படுத்தி அவருக்கு மொட்டை அடித்து, கொடுமைப்படுத்தியது சிறைத்துறை. புத்தக வெளியீட்டாளர்களான தங்கவேல், கலியபெருமாள் ஆகியோருடன் சேர்த்து ஆசைத்தம்பிக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. மொட்டை அடிக்கப்பட்ட மூவர் படத்தையும் அண்ணா, தனது திராவிடநாடு இதழில் வெளியிட்டார். திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார், சிறைச்சாலை என்ன செய்யும் என்ற சுந்தராம்பாள் பாட்டை பாடிக் காட்டினார். பாடி விட்டு, சிறைச்சாலை என்ன செய்யும் தெரியுமா, மொட்டை அடிக்கும் என்று முழங்கினார்.

24 முறை, இனம், மொழி, நாடு காக்கப்போராடி சிறை சென்றவர். நாடாளுமன்றத்தில் நிறைவாக உரையாற்றும்போது, “இந்தியாவை ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று முழங்கியவர். அப்போதே முழங்கியிருக்கிறார். திராவிடக் கோட்டையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் அவர். அத்தகைய ஆசைத்தம்பியை நாம் அந்தமானில் இழந்தோம். அந்தமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கழகக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது களைப்பாக இருக்கிறது – கண்ணைக் கட்டுவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

மூளையில் ரத்தக் குழாய் வெடித்து அங்கேயே இறந்தும் போனார். அவரது உடலை அங்கிருந்து எடுத்து வருவதற்கே பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அவரது உடலைப் பார்த்து தலைவர் கலைஞர் கதறினார். ஏனென்றால் தனது இறுதி உரையில் அந்தமானில் பேசுகிறபோது, கலைஞர் சார்பில் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் பேசி இருக்கிறார் ஆசைத்தம்பி.

ஆசைத்தம்பி பற்றி பேராசிரியர் சொல்கின்ற போது, “கலைஞரின் நெஞ்சில் வேல்பாய்ந்தால் அந்த வேலை எடுத்து எதிரியின் நெஞ்சிலே பாய்ச்சும் வீரம் கலைஞருக்கு உண்டு. கலைஞரின் முதுகில் யாராவது வேல் பாய்ச்சி விடக்கூடாது என்பதற்காக, நின்று காத்தவர் நம்முடைய ஆசைத்தம்பி’’ என்று சொன்னார். இதுதான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம், ஆசைத்தம்பியை நாம் மறக்கவில்லை அவரது உறுதியை மறக்கவும் முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் உறுதி தான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: