தொடர் உண்ணாவிரத போராட்டம் எதிரொலி ஆசிரியர் சங்கத்தினருடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை: பள்ளிக்கல்வித்துறை, நிதித்துறை செயலர் பங்கேற்பு, உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

சென்னை: டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகமான பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆசிரியர் சங்கத்தினரும், டெட் தேர்வர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மற்றும் ஆசிரியர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 138க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்து மயக்கமடைந்தனர்.

இதேபோல் 2013ம் ஆண்டு டெட் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காத தேர்வர்கள் 500க்கும் மேற்பட்டோரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு சங்கமான பகுதிநேர சிறப்பாசிரியர்கள், கடந்த 10 ஆண்டுகளாக அரசுப்பணியாளர்களாக உறுதிசெய்யப்படாத தங்களுக்குபணி வரன்முறை செய்யப்பட வேண்டும், தங்களுக்கான அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் மூன்று சங்க பிரதிநிதிகள் உடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்குமார் தயாளன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஆகியோர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை தலைமை செயலக பேச்சுவார்த்தைக்கு பிறகு சங்க இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க பொது செயலாளர் ராபர்ட் அளித்த பேட்டி: அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். எங்கள் கோரிக்கை எப்போது அமல்படுத்தப்படும். புத்தாண்டில் இருந்து புதிய ஊதியம் கிடைக்கும் என்று முதல்வர் தெரிவித்தால் உடனடியாக போராட்டத்தை கைவிடுவோம். நாங்கள் உடனடியாக எங்களுடைய கோரிக்கை அமல்படுத்துங்கள் என்று கேட்கவில்லை. இன்றிலிருந்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களாக நேரம் எடுத்து, ஜனவரி 1ம் தேதியில் இருந்தாவது இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் பதிலளித்தால் போதும்.

அதுவரை போராட்டம் தொடரும் என்றார். இந்நிலையில், 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கக் கூட்டமைப்பினர் அளித்த பேட்டியில், ‘‘பேச்சுவார்த்தை முடிவில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக அரசு செயலர் கூறி இருக்கிறார். எங்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். அரசிடம் இருந்து தீர்வு வரும்வரை போராட்டம் தொடரும். காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் அளித்த பேட்டியில், பணி வரன்முறை செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் வரை போராட்டம் நடைபெறும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post தொடர் உண்ணாவிரத போராட்டம் எதிரொலி ஆசிரியர் சங்கத்தினருடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை: பள்ளிக்கல்வித்துறை, நிதித்துறை செயலர் பங்கேற்பு, உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் appeared first on Dinakaran.

Related Stories: