பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

*தாமிரபரணியில் தடை எதிரொலியால் குளங்களில் கரைப்பு

விகேபுரம் : நெல்லை , தென்காசி மாவட்டங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடல் மற்றும் குளங்களில் கரைக்கப்பட்டன.விநாயகர்சதுர்த்தியையொட்டி நெல்லை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. விகேபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று சிவந்திபுரம் பகுதிக்கு வந்தடைந்தன.

விகேபுரத்திலிருந்து 24, அம்பாசமுத்திரத்திலிருந்து 8, கல்லிடைக்குறிச்சியிலிருந்து 15 என மொத்தம் 47 விநாயகர் சிலைகள் சிவந்திபுரத்திற்கு பக்தர்களால் மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்டன. இச்சிலைகள் அந்தந்த வாகனங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டன. அங்கு நடந்த விழாவிற்கு இந்து முன்னணி நகரத்தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். இதில் மாநில நிர்வாக கமிட்டி உறுப்பினர் சக்திவேலன், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன், அம்பை தலைவர் சங்கர், பொறுப்பாளர்கள் மில்லர், வீர மகேஷ், ராஜா, வில்லியன்பால், சுரேஷ் மற்றும் பாஜ தங்கேஸ்வரன், ராமராஜன், குட்டி, ராஜி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து விநாயகர் விஜர்சன ஊர்வலத்தை டாக்டர் முருகன் துவக்கி வைத்தார். சிவந்திபுரத்தில் துவங்கிய ஊர்வலம் வராகபுரம், அம்பலவாணபுரம், போலீஸ் ஸ்டேஷன், தாய்சினீஸ் தியேட்டர், சாலைத்தெரு, மூன்றுவிளக்கு, சந்தனமாரியம்மன் கோயில், மேலரதவீதி, வடக்குரதவீதி, தேரடிதிடல், டாணா வழியாக பாபநாசம் சென்றடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் ஆங்காங்கே நின்று ஊர்வலத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பாபநாசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பின்னர் அச்சிலைகள் அம்பாசமுத்திரம் தாசில்தார் சுமதி தலைமையில் மண்டல துணை தாசில்தார் ராஜதுரை, ஆர்.ஐ இசக்கி மற்றும் வி.ஏ.ஓக்கள் உள்ளடக்கிய வருவாய்
துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிலைகளை பெற்று கொண்ட வருவாய்துறையினர் அச்சிலைகளை விசர்ஜனம் செய்ய அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைக்குளம் குளத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி சதீஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் செய்திருந்தனர். ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கரைத்தால் தண்ணீர் மாசுபடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அம்பை அருகே வாகைகுளம் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

களக்காடு: களக்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் களக்காடு தோப்புத்தெரு, சாலைப்புதூர், கீழப்பத்தை, வியாசராஜபுரம், மாவடி, மலையடிபுதூர், பொத்தையடி உள்ளிட்ட 14 இடங்களிலும், அகில பாரத இந்து மகாசபா சார்பில் சிதம்பரபுரம், மூங்கிலடி, ராமகிருஷ்ணாபுரம், கல்லடி சிதம்பரபுரம், கடம்போடு வாழ்வு உள்ளிட்ட 15 இடங்களிலும், விநாயகர் சதுர்த்தி குழு சார்பில் இடையன்குளம், கீழ உப்பூரணி, கீழக்கருவேலங்குளம், நெடுவிளை, பத்மநேரி, மஞ்சுவிளை, கோவில்பத்து, கீழதேவநல்லூர் உள்ளிட்ட 24 இடங்களிலும் மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 18ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினசரி விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

நேற்று விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமும், விநாயகர் சதுர்த்தி குழு விநாயகர் சிலைகள் ஊர்வலமும் களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவில் முன்பிருந்து புறப்பட்டது. ரதவீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.
இதுபோல அகிலபாரத இந்து மகாசபா சார்பில் களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிதம்பரம், அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் முத்தப்பா, திருக்கோவில், திருமடம் கோட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், தென் தமிழ்நாடு இணை செயலாளர் சுப்பையா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகள் உவரிக்கு கொண்டு செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி களக்காட்டில் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி தாலுகாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேரன்மகாதேவி, வீரவநல்லூர், மேலச்செவல், கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி, முக்கூடல், திருவிருத்தான்புள்ளி, பூதத்தான்குடியிருப்பு ஆகிய இடங்களில் 20 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. வழக்கமாக இச்சிலைகள் அனைத்தும் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால் நேற்று முன்தினம் தாமிரபரணி ஆற்றில் குடிநீர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மதுரை ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து வருவாய்த்துறை சார்பில் மாற்று ஏற்பாடாக சேரன்மகாதேவியை அடுத்த காருகுறிச்சி குளத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து சேரன்மகாதேவி தாலுகாவில் உள்ள 20 விநாயகர் சிலைகளில் 17 சிலைகள் நேற்று காருகுறிச்சி குளத்தில் கரைக்கப்பட்டன. மீதமுள்ள 3 சிலைகள் உவரி கடலில் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியை முன்னிட்டு சேரன்மகாதேவி டிஎஸ்பி சுபக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக சேரன்மகாதேவியில் துவங்கிய விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அதிமுக நகர செயலாளர் பழனிக்குமார் துவக்கி வைத்தார். இதில் இந்து முன்னனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூடங்குளம்: செட்டிகுளம் பகுதியில் உள்ள கோலியங்குளம், சிவசுப்பிரமணியபுரம், மதகநேரி பிள்ளையார் குடியிருப்பு, புதுமனை, ஸ்ரீரங்க நாராயணபுரம் ஆகிய ஊர்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு செட்டிகுளம் கடலில் நேற்று கரைக்கப்பட்டன. அதேபோல் கூடங்குளம் பகுதியான வடக்கன்குளம்.

ஆவுடையாள்புரம், தில்லைநகர், கூடங்குளம் உள்ளிட்ட ஊர்களில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று விஜயாபதி கடலில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும காவல்படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் கூடன்குளம் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

திசையன்விளை: நெல்லை புறநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வள்ளியூர், நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை பகுதிகளில், இரண்டரை முதல் 11 அடி வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் அந்தந்த பகுதி மக்களால் பூஜிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை இந்த சிலைகள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு திசையன்விளை பைபாஸ்ரோடு, அடைக்கலம் காத்த விநாயகர் மற்றும் சாய்பாபா ஆலயத்தின் முன்பு கொண்டுவரப்பட்டது. அங்கு இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் தொடங்கியது.

பேரூராட்சி கவுன்சிலர் லிவியா சக்திவேல் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், கோட்ட தலைவர் தங்க மனோகர், கோபால், ராஜரிஷி முத்தையா சுவாமிகள், இந்து அன்னையர் முன்னணி ராஜேஸ்வரி, சுயம்புகலாசிங்கம், உலகம்மாள், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ், ஒன்றிய தலைவர் கணேசமூர்த்தி, தங்கவேலு ஆசிரியர், கொடிராஜகோபால், நகர தலைவர் ஜெயசீலன், செயலாளர் மணிகண்டன், செந்தில், ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வாகன ஊர்வலம் திசையன்விளை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று உவரி வந்தடைந்தது. பின்னர் அங்கு கடற்கரையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு விநாயகர் சிலைகள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டன.பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்திரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் இளைஞர்கள் சார்பில் பாவூர்சத்திரம் சந்தை தெரு கல்வி விநாயகர் மற்றும் வென்னியுடையார் சாஸ்தா கோயில் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தினசரி காலை மாலையில் பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்வதற்கான ஊர்வலம் பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோயிலில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

பாவூர்சத்திரம் மெயின் ரோடு, மேல பஸ் நிலையம், வி.ஏ.நகர் மற்றும் ஊரின் முக்கிய பகுதிகளில் மேள தாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கீழப்பாவூரில் உள்ள மேலப்பாவூர் குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதில் இந்து முன்னணி வழக்கறிஞர் சாக்ரடீஸ், பாஜ ஒன்றிய செயலாளர் மாரியப்பன், எஸ்பி கண்ணன் செல்வன், பிச்சையா, காளியப்பன், கே.ஏ.பரமசிவன், ஆறுமுகசாமி, சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: