கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே சாலையிலேயே நின்று செல்லும் வெளியூர் பஸ்கள் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் ஜிஎஸ்டி சாலையில் வெளியூர் பேருந்துகள் நின்று செல்கின்றன. இதனால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. எனவே, வெளியூர் பேருந்துகளை கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் உள்ளது. இங்கு சென்னை பிராட்வே, தி.நகர், கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இங்கு, வந்து செல்கின்றன.

இந்நிலையில், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் நாளுக்கு நாள் குடிமகன்களில் அதிகளவில் வந்து குடிந்து விட்டு இங்கேயே படுத்து உறங்குகின்றனர். குடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்துவிட்டும் போகின்றனர். இதனால், பொதுமக்கள் பல்வேறு தெல்லைகளுக்கு ஆளாகின்றனர். இதனிடையே, வெளியூர் செல்லும் தென்மாவட்ட பேருந்துகள் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என அப்போது அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், இப்போது பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையியே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகாரித்து வண்ணம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சென்று வரும் மாநகர பேருந்துகள், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்துக்குள் உள்ளே வந்து செல்வதற்காக பேருந்து நிலையம் கடந்த 2012ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், எந்த பேருந்துகளும் உள்ளே வந்து செல்வதில்லை.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்வதில்லை.

பயண நேர அட்டவணை தேவை: கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக மாநகர பேருந்துகள் எந்த நேரத்தில் புறப்படுகிறது என்பதை குறித்து, பயணிகள் நேர காப்பாளரிடம் சென்று கேட்டால் சரி வர பதில் சொல்வதில்லை. இதில் அக்கம், பக்கத்தில் இருக்கிறவர்களிடமும் அருகில் உள்ள கடைக்காரர்களிடமும் சென்று கேட்க வேண்டிய அவல நிலை உள்ளது. புதிதாக பேருந்து நிலையம் வரும் பயணிகள் பேருந்து போக்குவரத்துக்கான பயணம் நேரம் அட்டவணை இல்லாமல் திணறுகின்றனர். இதனால், பேருந்துகள் எப்போது புறப்படும். எப்போது வரும் என்பது தெரியாமல் பயணிகள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு பேருந்து போக்குவரத்துக்கான பயண நேர அட்டவணையை கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கூறுகின்றனர்.

எரியாத மின் விளக்குகள்: பேருந்து நிலையத்தில், 2 பகுதிகளில் உயர்மின் கோபுர விளக்குகள் உள்ளன. அதில், ஒரு பகுதியில் உள்ள உயர் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனை, சமூக விரோதிகள் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இதில், பயணிகளுக்காக அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் வைத்தால் அதை மதுபானம் அருந்துவதற்காக பயன்படுத்துகின்றனர்.
இதனை காரணம் கூறி, சின்டெக்ஸ் தொட்டியில் நகராட்சி நிர்வாகம் சார்பில், தண்ணீர் ஊற்றுவது கிடையாது. இதனாலும் இங்கு வரும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கெஸ்ட் ஹவுஸ்: மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்து பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்திற்குள் பயணிகளின் இருக்கை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் பலர் மதுபானம் அருந்திவிட்டு, பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, அங்கேயே 24 மணி நேரமும் தங்கி கெஸ்ட் ஹவுஸாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பேருந்து நிலையத்திற்குள் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதால் பேருந்து நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

The post கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே சாலையிலேயே நின்று செல்லும் வெளியூர் பஸ்கள் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: