கலைஞர் உரிமைத்தொகைக்கு 3.77 லட்சம் மகளிர் பதிவு வீடு, வீடாக சென்று கள ஆய்வு பணி துவக்கம்

*194 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 3.77 லட்சம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 194 கள அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, வரும் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள், இரண்டு கட்டங்களாக நடந்தது. மேலும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது.

கடந்த 20ம் தேதியுடன் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நிறைவடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் மொத்தம் 914 இடங்களில் நடைபெற்றது. முதற்கட்டமாக ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலும் நடைபெற்றது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20ம் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்களில், மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 77 ஆயிரத்து 945 குடும்பத் தலைவிகள், தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இது 68 சதவீதம் ஆகும். மாவட்டம் முழுவதும் 5.58 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 1,78,190 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்யவில்லை. முகாம்களில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும், பயோமெட்ரிக் முறையில் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பொதுமக்கள் அளித்த ஆதார் கார்டு, வங்கி கணக்குப் புத்தகம், மின் இணைப்பு அட்டை போன்றவற்றை வைத்து, மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியான பயனாளிகள் யார் என்ற விபரங்களை அதிகாரிகள் கண்டறிந்து வருகிறார்கள்.

இதற்கிடையில், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்த்து, கள ஆய்வு மேற்கொள்ள, நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாவில் 914 கள ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறையில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், சர்வேயர்கள், தாசில்தார்கள் கள ஆய்வு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு ரேஷன் கடை அடங்கியுள்ள பகுதிக்கு, ஒரு அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

அப்போது, முகாமில் அளித்துள்ள தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பது குறித்தும், நிலம் குறித்த விபரங்கள் எந்த அளவுக்கு சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற விபரங்களை கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முகாமில் 3.77 லட்சம் குடும்பத் தலைவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் அரசின் உத்தரவுப்படி, தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இருப்பினும் ஒரு சில விண்ணப்பங்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அது போன்ற விண்ணப்பங்களை மட்டும், நேரில் சென்று கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த வார இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடைந்து விடும். அதற்கு பின்பு தகுதியான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்,’ என்றனர்.

The post கலைஞர் உரிமைத்தொகைக்கு 3.77 லட்சம் மகளிர் பதிவு வீடு, வீடாக சென்று கள ஆய்வு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: