விதவிதமான உணவு.. வீடுகளில் அத்தப்பூ கோலம்: கேரளா முழுவதுமே ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..கோயில்களில் சிறப்பு வழிபாடு..!!

திருவனந்தபுரம்: கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை, மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவோண தினத்தில் கேரளாவை ஆண்ட மாமன்னன் மகாபலி, பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்கள் வீடுகளுக்கும் விஜயம் செய்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதனை நினைவுகூர்ந்து மாமன்னன் மகாபலியை வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கேரள பெண்மணி ஒருவர், விஷ்ணு தன்னை பாதாளத்தில் தள்ளும்போது மாமன்னன் மகாபலி மக்களைக் காண ஆண்டுக்கு ஒரு முறை நாட்டிற்கு வரும் வரம் பெற்றார். அவரது வருகையைத்தான் திருவோணம் தினமாக நாம் கொண்டாடுகின்றோம் என்றார்.

அதிகாலையிலேயே மக்கள் பாரம்பரிய உடைகளை உடுத்தி குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபட்டு ஓணம் திருநாளை வரவேற்றனர். தலைநகரம் திருவனந்தபுரம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள கோயில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கொச்சியில் புகழ் பெற்ற வாமன மூர்த்தி கோயிலில் மக்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்தனர். திருச்சூரில் பெண்கள் கசிவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். திருச்சூர் வடக்கு நாதன் சிவன் கோயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

The post விதவிதமான உணவு.. வீடுகளில் அத்தப்பூ கோலம்: கேரளா முழுவதுமே ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..கோயில்களில் சிறப்பு வழிபாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: