மாநில தலைமை தகவல் ஆணையர் தலைமையில் அரசின் அனைத்து நிர்வாகத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

சென்னை: அரசின் அனைத்து நிர்வாகத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 22.08.2023 அன்று மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அஃதர் (ஓய்வு) அவர்களின் தலைமையில், அனைத்து மாநிலத் தகவல் ஆணையர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் அனைத்து நிர்வாகத் துறையினருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முற்பகலில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்கள்(பொது) பங்கேற்றனர். பிற்பகலில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் அனைத்து (128) நிர்வாகத் துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-ஐ முறையாக பின்பற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், மாண்பமை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றமும் இச்சட்டத்தை பின்பற்றுதல் குறித்து வழங்கியுள்ள தீர்ப்புகளின் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மனுதாரர்களின் மனுக்களின் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்வது, முறையான தகவல் வழங்குவது, குறித்த காலத்திற்குள் தகவல் வழங்குவது குறித்து விளக்கப்பட்டது. அனைத்து அரசு நிர்வாகங்களிலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பாக தகவல்களை இணையத்தளத்திலும், பொதுவெளியிலும் பதிவேற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் அனைத்து அலுவலர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காலாண்டுக்கு ஒரு முறை இது போன்ற ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகளின் தகவல் பெறும் உரிமைச் சட்டம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில தலைமை ஆணையர் ப.தனசேகரன், மாநில தகவல் ஆணையர் மு.ஸ்ரீதர், மாநில தகவல் ஆணையர் பி.தாமரைக் கண்ணன், (ஓய்வு), மாநில தகவல் ஆணையர் ரா.பிரியகுமார், மாநில தகவல் ஆணையர் டாக்டர் கு.திருமலைமுத்து (ஓய்வு), மாநில தகவல் ஆணையர் முனைவர் மா.செல்வராஜ் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளர் செ.தனலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மாநில தலைமை தகவல் ஆணையர் தலைமையில் அரசின் அனைத்து நிர்வாகத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: