மதுரை: கால்நடைகளின் அவசர சிகிச்சைக்கு இருப்பிடம் தேடி வந்து உயிர் காக்கும் வகையிலான அரசின் ‘1962’ இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம், இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்து 106 கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான இலவச அவசர சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசின் ‘1962’ இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் நடைமுறையில் உள்ளது. விவசாயிகள் மற்றும் கிராமத்தினரின் வாழ்வாதாரமான கால்நடைகளை காக்கும் விதமாக ‘1962’ ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. கன்று ஈனுவதில் பிரச்னை, நோய் குறைபாடு, எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ‘1962’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு கால்நடை உரிமையாளர் அழைப்பு விடுத்தவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் தேடி வந்து நோய் பாதித்த கால்நடைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கிறது.
இந்த ஆம்புலன்ஸ் குழுவில் ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் உள்ளனர். கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் 24 மணிநேரம் செயல்படும் ‘1962’ ஆம்புலன்சில் ரத்த மாதிரி உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளும் நவீன மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் என பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளது. இதனால் சிக்கலான நிலையில் உள்ள கால்நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் உரிய நேரத்தில் விரைவாகவும், முழுமையாகவும் கிடைக்கிறது. பசு, எருமை, காளை, கோழி, ஆடு, நாய், குதிரை, பன்றி போன்ற கால்நடைகளுக்கு கன்று ஈனுதல் பிரச்னை, வயிற்றுப்போக்கு, விஷக்கடி உள்ளிட்ட அவசரகால கால மருத்துவ தேவைக்கு ‘1962’ ஆம்புலன்ஸ் சேவை பெரும் உதவியாக இருக்கிறது.
‘1962’ இலவச கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2019, நவம்பர் முதல் 2023 மார்ச் வரை, மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, கன்று ஈனுதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக 3,25,106 கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பசு மற்றும் எருமை மாடுகளுக்கு கன்று ஈனுதலின் போது ஏற்பட்ட சிக்கலுக்கு உயர்தர சிகிச்சையளித்து தாய், சேயின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. மேலும் ‘1962’ ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் காயமுறும் காளைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீடு மற்றும் பண்ணைகளில் உள்ள கால்நடைகள் நோய் குறைபாடு அல்லது எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
நடக்க முடியாத சூழலில் கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஏதுவாக ‘ஹைட்ராலிக் லிப்ட்’ வசதி, இரவிலும் சிகிச்சையளிக்க ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்டர் வசதியும் இந்த ஆம்புலன்சில் உள்ளது. இந்த பணிகள் குறித்து ‘1962’ இலவச கால்நடை சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை திட்ட செயலாக்க அலுவலர் பால் ராபின்சன் கூறும்போது, ‘‘கால்நடை வளர்ப்போர் ‘1962’ என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தால் உடனடியாக தேடி வந்து மருத்துவ அவசர உதவி தேவைப்படும் கால்நடைகளுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவை மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றார்.
*மாவட்டவாரியாக சிகிச்சை விபரம்
தமிழகத்தில் ‘1962’ இலவச சேவை எண்ணில் அழைத்து, மாவட்ட வாரியாக சிகிச்சை பெற்ற கால்நடைகள் குறித்த விபரம் வருமாறு: தேனி – 15,380, பெரம்பலூர் – 15,169, புதுக்கோட்டை – 13,992, திண்டுக்கல் – 13,718, விருதுநகர் – 13,083, நாகப்பட்டினம் – 12,443, ஈரோடு – 12,333, திருப்பூர் – 11,928, சேலம் – 11,909, மதுரை – 11,699, கடலூர் – 11, 615, திருவாரூர் – 11,508, வேலூர் – 11,155, நெல்லை – 11,132, தர்மபுரி – 10,604, விழுப்புரம் – 10,272, ராமநாதபுரம் – 9,592, திருச்சி – 9,549, தஞ்சாவூர் – 9,317, கிருஷ்ணகிரி – 9,206, கோவை – 9,132, கன்னியாகுமரி – 8,893, திருவள்ளூர் – 8,709, அரியலூர் – 8,537, கரூர் – 8,268, தூத்துக்குடி – 7,989, சிவகங்கை – 7,733, திருவண்ணாமலை – 7,329, காஞ்சிபுரம் – 6,349, சென்னை – 6,039, நாமக்கல் – 5,756, நீலகிரி- 476.
The post கிராம மக்கள், விவசாயிகளின் இருப்பிடம் தேடி வந்து மருத்துவ சேவை கால்நடைகளின் காவலன் ‘1962’: இதுவரை 3.25 லட்சம் கால்நடைகளுக்கு மறுவாழ்வு appeared first on Dinakaran.
