காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: திருச்சி முக்கொம்பில் பரபரப்பு

திருச்சி: திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் பரிசல்களில் சென்று கைது செய்தனர். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது, டெல்டா விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 22வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக்கூடாது. மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வரான பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்திருந்தார். அவரை கண்டித்து திருச்சியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று காலை முக்கொம்பு சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் இறங்கி 5 அடி ஆழ தண்ணீரில் நின்று கொண்டு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் கர்நாடக முன்னாள் முதல்வரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தகவல் அறிந்ததும் விவசாயிகளை கைது செய்ய ஜீயபுரம் போலீசார் 3 பரிசல்களில் சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அக்கரைக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகளை உடைகள் மாற்ற வைத்து கைது செய்து அதே பரிசல்களில் அழைத்து வந்தனர். கரைக்கு வந்ததும், அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று எச்சரித்து விவசாயிகளை விடுவித்தனர்.

The post காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: திருச்சி முக்கொம்பில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: