இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. அதில், விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்ததாக வேட்புமனுவில் கூறிய நிலையில், வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளம், வாணி பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பது ஆகியவற்றை ரவீந்திரநாத் மறைத்துள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் 4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து மட்டுமே வேட்பு மனுவில் காட்டியிருக்கிறார். இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், கபில் சிபல் மற்றும் ஜெயந்த் பூஷன்,‘‘தேர்தலின் போது ரவீந்திரநாத் அனைத்து சொத்துக்களுக்கும் முறையாக கணக்கு காட்டி உள்ளார்’’ என தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ ஓ.பி.ரவீந்திரநாத் தொடர்பான வழக்கு அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கில் இரு தரப்பினரும் இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஓ.பி.ரவீந்தரநாத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படலாம்’’ என உத்தரவு பிறப்பித்தனர்.
The post ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி பதவி பறிப்புக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
