பாட்னா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் பீகாரில் 75 தொகுதிகளில் முடிவுகள் மாறியதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சித்தராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பரகலா பிரபாகர் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் பிரச்சனையை விடவும் மிக முக்கியமானது என்றார். இது இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கோ அல்லது இரட்டைப் பதிவுகளைத் தவிர்ப்பதற்கோ இலக்கு வைக்கப்படவில்லை என்று கூறினார்.
பீகாரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை 8.22 கோடி என்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர தீர்த்தத்திற்கு பிறகு அது 7.42 கோடியாகக் குறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சுமார் 80 லட்சம் மக்களால் தங்கள் பெயர்களைப் பட்டியலில் காண முடியவில்லை. இதன் நோக்கத்தை சந்தேகிப்பது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்காளர்களை நீக்க இலக்கு வைப்பதாக சந்தேதப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் பீகாரை விடவும் மிகவும் மோசமாக இருப்பதாகவும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சித்தராமனின் கணவர் பரகலா பிரபாகர் கூறியுள்ளார்.
