சித்தாமூர் அருகே பாஞ்சாலி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

செய்யூர்: சித்தாமூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே இந்தளூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் திருக்கோயிலில், இந்த ஆண்டு அக்னி வசந்த உற்சவ விழா கடந்த மாதம் 20ம் தேதி விநாயகர் உற்சவத்துடன் துவங்கியது. பின்னர் கடந்த 1ம் தேதி அர்ஜுனன் வில் வளைப்பு நிகழ்வு நடந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கோயில் வளாகத்தில் பாஞ்சாலிக்கும் சுபத்திரைக்கும் அர்ஜுனன் மாலையிடும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், இந்தளூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் பாஞ்சாலி அம்மன் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றனர். பின்னர், திருக்கல்யாணத்துக்கான யாகசாலை மற்றும் பாஞ்சாலிக்கும் சுபத்திரைக்கும் அர்ஜுனன் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தன. இதைத் தொடர்ந்து, திருக்கல்யாணத்துக்கு மொய் எழுதும் நிகழ்வும் பிரசாதமும் சுமங்கலி பெண்களுக்கு வளையல், சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு மங்கலப் பொருட்களும் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நேற்றிரவு மலர்கள் மற்றும் மின் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பாஞ்சாலி அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர், இன்று அதிகாலை வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாஞ்சாலி அம்மனை வழிபட்டனர்.

The post சித்தாமூர் அருகே பாஞ்சாலி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: