குற்றாலம் சொக்கம்பட்டி ஜமீன் கல் மண்டபத்தில் இருந்த 400 ஆண்டுகள் பழமையான பொருட்களை பேரூராட்சி நிர்வாகம் கடத்தல்?: சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கோயில் நிர்வாகம் பரபரப்பு புகார்

தென்காசி: குற்றாலம் சொக்கம்பட்டி ஜமீன் கல் மண்டபம் உரிமை தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குற்றாலநாதர் கோயில் நிர்வாகம் இடையே நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தற்போது கோயில் நிர்வாகம் சார்பில் பழங்கால பொருட்களை பேரூராட்சி நிர்வாகம் கடத்தியதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றாலம் அண்ணா சிலை ஆற்றுப்பாலம் பகுதி முதல் சன்னதி பஜார் மற்றும் செங்கோட்டை சாலை பிரியும் இடத்தில் உள்ள விநாயகர் கோயில் வரை சாலையின் இருபுறமும் பழங்கால கல் மண்டபத்தால் ஆன சத்திரங்கள் உள்ளது‌.

இவற்றின் மீது குற்றாலம் குற்றாலநாதர் கோயில் அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு இடையே யாருக்கு உரிமை என்பது தொடர்பாக 1977ம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்திரத்தில் உள்ள பித்தளை, செம்பு உள்ளிட்ட பழமையான பாத்திரங்களை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தினர் சத்திரத்தில் இருந்து எடுத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் குற்றாலம் கோயில் நிர்வாக அதிகாரியும் அறநிலையத்துறை உதவி ஆணையருமான கண்ணதாசன் நெல்லை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் விளா பூஜை கட்டளை செய்யும் வகைக்கு கட்டளை ஏற்படுத்தப்பட்டு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சொக்கம்பட்டி ஜமீன் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. மேற்படி கட்டளையின் நோக்கம் இக்கோயிலில் நாள்தோறும் விளாபூஜை கட்டளை செய்வது, சித்திரை, ஐப்பசி, மார்கழி திருவிழாக்களில் 6ம் திருநாள் மண்டகப்படி நடத்துதல் மற்றும் தேசாந்திரிகளுக்கு நாள்தோறும் மகேஸ்வர் பூஜை போன்ற காரியங்கள் செய்வதற்காகும்.

மேற்படி கட்டளைக்காக குற்றாலம் செங்கோட்டை சாலையில் அண்ணா சிலைக்கு அருகில் இரு பெரிய கல்மண்டபமும் அதைச்சார்ந்த இடங்களும் உண்டு. இதில் தென்பக்கம் உள்ள கல்மண்டபத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட விலைமதிப்பு மிக்க பாத்திரங்கள் இருந்துள்ளது. மேற்படி கட்டளை நிர்வாகம் ஆரம்ப காலத்தில் இக்கோயிலால் செய்யப்பட்டு வந்த நிலையில் அரசாணைப்படி மேற்படி நிர்வாகம் அப்போதைய மாவட்ட நிர்வாக வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. மாவட்ட நிர்வாக வாரியம் கலைக்கப்பட்ட பின்பு மாவட்ட கலெக்டர் நிர்வாகத்திற்கு வரப்பெற்று தற்போது குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கும் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் இடையே வழக்கு நடைபெற்று நான்கு நீதிமன்றங்களில் கோயிலுக்கு ஆதரவாக உத்தரவு வரப்பெற்றுள்ளது. ஆனாலும் பேரூராட்சி நிர்வாகத்தினர் கட்டளை நிர்வாகத்தை ஒப்படைக்க மறுத்ததால் கோயிலிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிப்பேராணை தாக்கல் செய்து அதுவும் கோயிலுக்கு அனுகூலமாக தீர்ப்பு வரப்பெற்றுள்ளது. இந்நிலையில் மேற்படி கட்டளைக்குச் சொந்தமான விலைமதிப்பு மிக்க 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாத்திரங்களை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மேற்சொன்ன கல் மண்டபத்திலிருந்து டிராக்டர் மூலம் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் தகவல் பரவி வருகிறது.எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து கோயில் கட்டளைக்குப் பாத்தியப்பட்ட 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட விலைமதிப்பு மிக்க செம்பு பித்தளை, வெண்கல பாத்திரங்களை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* பேரூராட்சி நிர்வாகத்தின் பாதுகாப்பில் உள்ளது

இதுகுறித்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன் கூறுகையில் மண்டபம் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கோயில் நிர்வாகத்திற்கும் இடையே நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. முன்பு அந்த சத்திரத்தில் பேரூராட்சி பணியாளர்கள் சிலர் தங்கி இருந்தனர். தற்போது அங்கு பேரூராட்சி பணியாளர்கள் யாரும் இல்லை. சில தனிநபர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள பித்தளை, செம்பு பாத்திரங்களின் பாதுகாப்பு கருதி சுகாதார மேற்பார்வையாளர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டு பொருட்கள் அனைத்தும் கணக்கு எடுக்கப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் மேல் முறையீடு செய்ய இருக்கிறது. எனவே பாத்திரங்களை கோயில் நிர்வாகத்திடம் தற்போது ஒப்படைக்கும் சூழல் இல்லை. இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தான் அவை ஒப்படைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகத்திடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ விளக்கம் கேட்டிருக்கலாம்‌. கதவு, பூட்டு உள்ளிட்டவை சரிவர இல்லாத நிலையில் தனி நபர்களிடமிருந்து பாதுகாத்து பத்திரப்படுத்தப்படுவதற்காகவே அவை எடுத்து வரப்பட்டது என்றார்.

* பேரூராட்சி, கோயில் நிர்வாகத்துக்கு இடையே மோதல்

குற்றாலத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குற்றாலம் கோயில் நிர்வாகம் அதேபோன்று பேரூராட்சி நிர்வாகம் வனத்துறை ஆகியவற்றுக்கு இடையே காலம் காலமாக மோதல் நீடித்து வருகிறது. வனத்துறை அவ்வப்போது அருவிகளின் மீது உரிமை கொண்டாடுவது வழக்கம். சிற்றருவி சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சி நிர்வாகத்தின் வசம் இருந்தது. ஆண்டுக்கு ஒரு ரூபாய் கட்டணம் என்ற அடிப்படையில் சிற்றருவியை பராமரித்து வந்தது. ஆனால் ஒரு ரூபாய் கட்டணத்தை பேரூராட்சி பல ஆண்டுகளாக கட்டவில்லை என்று கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சிற்றருவியை மீட்டுக் கொண்டது. இது மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கு தேவையான சுகாதார வளாகம், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்பதிலும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

The post குற்றாலம் சொக்கம்பட்டி ஜமீன் கல் மண்டபத்தில் இருந்த 400 ஆண்டுகள் பழமையான பொருட்களை பேரூராட்சி நிர்வாகம் கடத்தல்?: சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கோயில் நிர்வாகம் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: