ஆரம்ப சுகாதார நிலையத்தில் இணை இயக்குனர் ஆய்வு கர்ப்பிணிகள் கருவின் பாலினத்தை அறிவது சட்டத்திற்கு புறம்பானது

*விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர்களுக்கு அறிவுரை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிவது சட்டத்திற்கு புறம்பானது என தாய்மார்களுக்கு தெரிந்து கொள்ளும்படி பதாதைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்களுக்கு இணை இயக்குனர் மாரிமுத்து நேற்று திடீர் ஆய்வின்போது மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஜோலார்பேட்டையில் உள்ள கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 30 படுக்கை வசதி கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு 24 மணி நேரமும் பிரசவம் மற்றும் சிகிச்சை அளிக்கும் வசதியும் உள்ளது. இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மாவட்ட சுகாதாரம் மற்றும் ஊரகப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு பிரிவு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பிறகு 30 படுக்கை வசதி கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ அறைக்கு சென்று பார்வையிட்டார். குழந்தை பேரு அடைந்து சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடம் மருத்துவர்களின் சிகிச்சைகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்களிடம் கர்ப்பிணி பெண்களுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பிறக்கும் குழந்தைகள் ஆண்? பெண்ணா? என்பது பற்றி தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது. கர்ப்பிணி தாய்மார்கள் கேட்டாலும் இது குறித்த எந்தவித தகவலும் அளிக்கக்கூடாது. மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிவது சட்டத்திற்கு புறம்பானது என பதாகைகள் மூலம் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த தாய்மார்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் இனியா, வித்தியா மற்றும் சுகாதார செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post ஆரம்ப சுகாதார நிலையத்தில் இணை இயக்குனர் ஆய்வு கர்ப்பிணிகள் கருவின் பாலினத்தை அறிவது சட்டத்திற்கு புறம்பானது appeared first on Dinakaran.

Related Stories: