‘வேலுமணி அண்ணனுடன் நீ பயணிக்கும் வரைதான்…’பாஜ எம்எல்ஏ வானதிக்கு ஜார்கண்ட் கவர்னர் எச்சரிக்கை

கோவை: கோவை விழாவில் வானதி சீனிவாசன் எம்எல்ஏவுக்கு ஜார்கண்ட் கவர்னர் எச்சரிக்கை விடுத்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்ட் மாநில கவர்னராக திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரும், கோவை தொகுதி முன்னாள் எம்.பி.யும், தமிழக பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவருக்கு, கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. விழாவுக்கு, முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, பாஜ மகளிர் அணி தேசிய செயலாளரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.

விழாவில், பங்கேற்ற அனைத்து தலைவர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனின் பொதுவாழ்வு பயணம் பற்றி குறிப்பிட்டு, வாழ்த்தி பேசினர். இறுதியில், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ஏற்புரையில், ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அண்ணனுடன் நீ பயணிக்கும் வரை உனக்கு பிரச்னை இல்லை. நீ எதிரணியில் இருந்தால் காணாமல் போய்விடுவாய்’’ என வானதி சீனிவாசனை பார்த்து பேசினார். இதைக்கேட்டு வானதி சீனிவாசன் ஒரு கனம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சுதாரித்துக்கொண்டார். மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாய்விட்டு சிரித்தார். விழா முடிந்து மேடையை விட்டு இறங்கிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ‘‘இதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாம் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் என்பதால் அப்படி குறிப்பிட்டேன்’’ என வானதி சீனிவாசனிடம் சமாதானம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கோவையில் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க செல்லும்போது அதிமுக எம்எல்ஏக்களுடன் வர கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் அழைப்பு விடுத்தால், பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் செல்வதில்லை. இந்த தகவலை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பார்வைக்கு எஸ்.பி. வேலுமணி கொண்டு சென்றதாகவும், இதன் எதிரொலியாக கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மேடையில் இவ்வாறு பேசியதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.

The post ‘வேலுமணி அண்ணனுடன் நீ பயணிக்கும் வரைதான்…’பாஜ எம்எல்ஏ வானதிக்கு ஜார்கண்ட் கவர்னர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: