உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை கெட்டுப்போன 14 கிலோ இறைச்சி பறிமுதல்-பினாயில் ஊற்றி அழிப்பு

நெல்லை : பாளை ஐகிரவுண்ட் பகுதி மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன கோழி, ஆடு இறைச்சிகள், பழைய புரோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழித்தனர்.

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை நெல்லை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா உத்தரவின்பேரில் பாளை ஐகிரவுண்ட் பகுதி மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் குழுவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பழைய மற்றும் கெட்டுப்போன பொறித்த கோழி, ஆடு இறைச்சி, பழைய புரோட்டாக்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 14 கிலோ கோழி, ஆடு இறைச்சி மற்றும் புரோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. மற்றொரு ஓட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் 2 கிலோ 200 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற பிளாஸ்டி கவர்களில் ரசம், மோர், கூட்டு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பேக் செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 10 கிலோ பேக்கிங் உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

The post உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை கெட்டுப்போன 14 கிலோ இறைச்சி பறிமுதல்-பினாயில் ஊற்றி அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: