திருவில்லிபுத்தூரில் இன்று கொடியேற்றத்துடன் பெரியாழ்வார் திருஆனி சுவாதி திருவிழா தொடக்கம்: 28ம் தேதி செப்பு தேரோட்டம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய ஆழ்வார் சன்னதியில் திரு ஆனி சுவாதி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 28ம் தேதி செப்புத்தேரோட்டம் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் ஸ்ரீபெரியாழ்வார் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் திருஆனி சுவாதி திருவிழா நடைபெறும். இதன்படி இந்தாண்டு திரு ஆனி சுவாதி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி பெரியாழ்வார் சன்னதியில் இன்று காலை கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க மாடவீதிகள் மற்றும் ரத வீதிகள் வழியாக கொடிப்பட்டம் வீதி உலாவாக வந்து கொடி மரத்திற்கு அருகில் வைத்து கொடிபட்டத்திற்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை 8.30 மணிக்கு ஆண்டாள் கோயில் அர்ச்சகர் ரகுபட்டர் கொடிமரத்தில் கொடியேற்றினார். இன்றிலிருந்து தினமும் பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தினமும் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28ம் தேதி செப்பு தேரோட்டம், 29ம் தேதி தீர்த்தவாரி மண்டபத்தில் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post திருவில்லிபுத்தூரில் இன்று கொடியேற்றத்துடன் பெரியாழ்வார் திருஆனி சுவாதி திருவிழா தொடக்கம்: 28ம் தேதி செப்பு தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: