எல்லாமே ஆன்லைனாகி போச்சுது…க்யூஆர் கோடு மூலம் டவுன் பஸ்சில் டிக்கெட்: கோவையில் அறிமுகம்

கோவை: பல்வேறு வணிக, வர்த்தக நிறுவனங்களில் சில்லரை காசு தட்டுப்பாடு அதிகமாகிவிட்டது. சில்லரை பிரச்னையை தீர்க்க பணமில்லா பரிவர்த்தனை அதிகமாகி வருகிறது. போன் பே, கூகுள் பே, பேடிஎம் என தள்ளுவண்டி பிளாட்பார கடைகள் முதல் தங்க நகைக்கடைகள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் என பரவலாக ஆன்லைன் பரிவர்த்தனை நடக்கிறது. தற்போது இந்த பரிவர்த்தனையை ஒரு தனியார் பஸ் நிறுவனமும் கையில் எடுத்துள்ளது. பஸ்களில் சில்லரை பிரச்னையால் பயணிகள், கண்டக்டர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடக்கிறது. சரியான சில்லரை வாங்க முடியாத நிலையில் பயணிகளும், சில்லரை தர முடியாமல் கண்டக்டர்களும் தவிக்கின்றனர்.

இதை தவிர்க்க, கோவையில் முதல் முறையாக தனியார் பஸ்சில் க்யூஆர் கோடு மூலம் பணம் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தனியார் பஸ் நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 5 பஸ்களிலும் பயணிகள் டிக்கெட் எடுக்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். கண்டக்டரிடம் டிக்கெட்டுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு அதில் பணம் செலுத்தலாம். இது குறித்து தனியார் பஸ் நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘நீண்ட தூரம் செல்லும் பஸ்களைவிட உள்ளூர்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களில் அதிக அளவு சில்லரை பிரச்னை உள்ளது.

சில சமயங்களில் கண்டக்டருக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் கூட ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க யோசித்தபோதுதான் கடைகளில் பணம் செலுத்துவதற்கு க்யூஆர் கோடு வசதி உள்ளதுபோல பஸ்சில் அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனவே எங்கள் நிறுவனத்தின் 5 பஸ்களிலும் க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்பி டிக்கெட் பெற வசதி செய்யப்பட்டது. இதற்கான குறுஞ்செய்தி கண்டக்டரின் செல்போனுக்கு செல்வது போல் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் குறுந்தகவலை காட்டி கண்டக்டரிடம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் சில்லரை பிரச்னை வெகுவாக குறைந்துள்ளது’’ என்றனர். இந்த தகவல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post எல்லாமே ஆன்லைனாகி போச்சுது…க்யூஆர் கோடு மூலம் டவுன் பஸ்சில் டிக்கெட்: கோவையில் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: