ஹாரிஸ் ஜெயராஜின் வெளிநாட்டு காருக்கு விதித்த அபராதத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கான இறக்குமதி வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி கிராண்டூரிஸ்மோ எஸ் கோப் என்ற இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழ்நாட்டில் ஓட்டுவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. மேலும், 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தக் கூறி கடந்த 2019ம் ஆண்டு வட்டார போக்குவரத்து துறை, ஹாரிஸ் ஜெயராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நுழைவு வரியுடன் சேர்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என்று ஹாரிஸ் ஜெயராஜுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் அபராதம் செலுத்தும்படி தமிழ்நாடு அரசு ஹாரிஸ் ஜெயராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், காருக்கான நுழைவு வரி ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது.

நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில் தனக்கு மட்டும் அபராதத்துடன் செலுத்தும்படி உத்தரவிட்டது பாரபட்சமானது என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

The post ஹாரிஸ் ஜெயராஜின் வெளிநாட்டு காருக்கு விதித்த அபராதத்துக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: