சசிகலா- ஓபிஎஸ் ஜூன் 7ல் சந்திப்பு?

திருச்சி: தஞ்சாவூரில் ஜூன் 7ல் நடைபெறவுள்ள வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் ஓபிஎஸ்சுடன், சசிகலா சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் என நான்கு அணிகள் செயல்பட்டு வந்தன. அதிகார போட்டி ஏற்பட்டதால் 4 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு சென்றபின் டிடிவி தினகரன் அமமுக கட்சியை துவங்கினார். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரட்டை தலைமையில் ஆட்சி நடத்தி வந்தனர். திடீரென எடப்பாடிக்கு ஆதரவாக ஒற்றை கோஷம் எழுந்ததால், இரட்டை தலைமையில் விரிசல் ஏற்பட்டது. பொதுக்குழு நடத்தப்பட்டு எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்த்தெடுக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், அதிமுக கட்சி மற்றும் அலுவலகம் அவரிடம் சென்றது. இதனால் ஓபிஎஸ் தனித்து விடப்பட்டார். தனக்கு தொண்டர்கள் பலம் உள்ளதாக கூறி வரும் அவர், அதை நிரூபிக்க திருச்சியில் மாநாடு போட்டார். ஆனால், அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து அரசியல் எதிர்காலம் கருதி சசிகலா, டிடிவி.தினகரனுடன் கைகோர்க்க ஓபிஎஸ் முடிவு செய்தார். அதன்படி, டிடிவி.தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர், சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால், இருவர் சந்திப்பும் தாமதமானது.

இந்நிலையில் ஜூன் 7ம் தேதி தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் சண்முக பிரபு-யாழினி திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த திருமணத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வைத்திலிங்கம் அழைப்பிதழ் வழங்கி உள்ளார். விரைவில் சசிகலாவையும் சந்தித்து திருமண அழைப்பிதழை வைத்திலிங்கம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தஞ்சாவூரில் நடக்க உள்ள திருமண நிகழ்ச்சியில் ஓபிஎஸ்- சசிகலா இருவரும் நேரடியாக சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது. இதற்கான முயற்சியில் வைத்திலிங்கம் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் ஜூன் 12ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த டிடிவி திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஓபிஎஸ், சசிகலா பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

The post சசிகலா- ஓபிஎஸ் ஜூன் 7ல் சந்திப்பு? appeared first on Dinakaran.

Related Stories: