உரிம நிபந்தனைகளை மதிப்பதே இல்லை விதிகளை மீறும் ‘மனமகிழ் மன்றங்கள்’:அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மதுபானம் சப்ளை

தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, மதுபானம் விற்க உரிமம் பெற்ற கிளப்கள், ஓட்டல்கள், மனமகிழ் மன்றங்கள் (ரெக்ரியேஷன் கிளப்) போன்றவற்றில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் மது விற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில கிளப்களில் இந்த நிபந்தனைகளை மீறியும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் கிளப்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் பாபு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், ‘‘சில கிளப்கள், ஓட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி அதிகாலை 3 மணி வரையிலும் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிமம் பெற்றுள்ள இந்த கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தி, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில், கிளப்புகள் மற்றும் ஓட்டல்கள் உரிம நிபந்தனைகளின்படி செயல்படுகின்றனவா என ஆய்வு செய்யுமாறு கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

விதிகளை மீறி செயல்படும் பார்கள் குறித்து மேற்கண்ட பொது நல வழக்கு சுட்டிக்காட்டியுள்ளது ஒரு புறம் இருக்க, இத்தகைய விதிமீறல்கள் குறித்து பரவலாகவே குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. குறிப்பாக ரெக்ரியேஷன் கிளப்புகள் எனப்படும் மனமகிழ் மன்றங்கள் சிலவற்றில் இத்தகைய விதிமீறல்கள் நடப்பதை, அந்த கிளப்புகள் இருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் கூட சுட்டிக்காட்டி வந்துள்ளனர். காரணம், இத்தகைய சிறிய மனமகிழ் மன்றகளில்தான், கண்ணுக்குத்தெரியாமல் விதிமீறல்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது.

வெளிநாட்டு மதுபானங்களும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் விற்பனை செய்வது, தனியுரிமை அல்லாத ரெக்ரிஷேன் கிளப்புகளில் (மனமகிழ் மன்றங்களில்) மதுபானம் விற்பனை செய்வது, ஸ்டார் ஓட்டல் பார்களில் மதுபார்கள் நடத்துவது என பல்வேறு வகையான லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் குறிப்பாக, சிறிய வகையில் செயல்படும் கிளப்புகளான மனமகிழ் மன்றங்களில்தான் பல விதிமீறல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இவை எப்எல்2 உரிமம் பெற்று இயங்குகின்றன. இவ்வாறு எப்எல் 2 உரிமம் பெற்று சுமார் 70 கிளப்புகள் உள்ளதாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, எப்எல்2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் அப்பட்டமான விதிமீறலில் ஈடுபடுகின்றன. இந்த மனமகிழ் மன்றங்கள் அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் சப்ளை செய்ய வேண்டும். ஆனால், பதிவு செய்துள்ள உறுப்பினர்களால் அழைத்துவரப்படாத உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் இங்கு மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகிறது. இந்த மன்றங்கள் பெற்றுள்ள உரிம விதிகளின்படி மதுபானம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரைதான் சப்ளை செய்ய வேண்டும். ஆனால், காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்கு பிறகும் கூட மதுபானங்கள் வழங்கப்படுகின்றன. மதுபானம் அருந்துபவர்களால் குற்றங்கள் நிகழாமல் இருக்கவும், பிற பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும்தான் மன்றங்களுக்கு இந்த நேர விதி அமலில் உள்ளது.

ஆனால், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பும் பின்பும் மதுபானம் சப்ளை செய்வதன் மூலம், மனமகிழ் மன்றங்கள் விதிகளை அப்பட்டமாக மீறுகின்றன. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள், விதிமீறலை அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதுபோல் நட்சத்திர ஓட்டலுக்கான அந்தஸ்து இல்லாத சில ஓட்டல்கள் கூட எப்எல்3 உரிமத்தை வைத்துள்ளன. என மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனமகிழ் மன்றங்களில் திடீர் ரெய்டுகள் நடத்த வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மது உரிமம் பெற்றுள்ள கிளப் மற்றும் ஓட்டல்களில் உரிம நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

* கிளப்புகளில் மது அருந்த நிபந்தனைகள் என்ன?
ரெக்ரியேஷன் கிளப் எனப்படும் மனமகிழ் மன்றங்களுக்கு எப்எல்2, நட்சத்திர ஓட்டல்களுக்கு எப்எல்3 லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன. எப்எல்2 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்படும் மதுபான உரிம விதிமுறைகளின்படி, 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்க கூடாது, வெளியில் இருந்து கொண்டுவரும் மதுபானங்களுக்கு அனுமதியில்லை. செல்லப்பிராணிகளுக்கு அனுமதியில்லை. பெண்கள் முழங்காலுக்கு கீழ் ஆடை அணிந்து வர வேண்டும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மது வழங்கக் கூடாது. கிளப் பார்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்பவை முக்கிய நிபந்தனைகளாகும்.

* லைசென்ஸ் வகைகள்
ஓட்டல்கள், மனமகிழ் மன்றங்கள் போன்றவற்றில் மதுபான விற்பனைக்காக லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் சில்லறை விற்பனை அல்லது வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமம், எப்எல் 1 எனப்படுகிறது. இதுபோல் எப்எல் 2 உரிமமானது, தனியுரிமை அல்லாத மனமகிழ் மன்றங்களில் (ரெக்ரியேஷன் கிளப்) மது பான வகைகளை இருப்பு வைத்து அவற்றின் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான உரிமமாகும்.

எப்எல் 3 என்பது, நட்சத்திர விடுதியில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்தியாவில் குடியிருக்கும் வெளிநாட்டவர் மற்றும் இந்திய குடிமக்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட அறையில் மது பானம் வகைகளை இருப்பு வைத்து மது அருந்துவதற்கும் அல்லது அதே நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கும் தனி அறைக்கு எடுத்துச்சென்று மதுபானம் அருந்துவதற்கும் வழங்கப்படும் உரிமமாகும்.

இதுதவிர, அறிவியல் ரீதியாக ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படுபவை, ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு மது பானம் வகைகளை இருப்பு வைத்து விற்பனை செய்ய வழங்கப்படும் உரிமம், ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் லிமிடெட் அல்லது சர்வதேச விமானங்களை இயக்கும் பிற விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் சர்வதேச பயணிகளுக்கு விமானங்களில் இருப்பு வைத்து வழங்க அளிக்கப்படும் சிறப்புரிமம் என பல்வேறு வகைகளில் மதுபான விற்பனை மற்றும் சப்ளைக்கான லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள்,1981ன் கீழ் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

The post உரிம நிபந்தனைகளை மதிப்பதே இல்லை விதிகளை மீறும் ‘மனமகிழ் மன்றங்கள்’:அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மதுபானம் சப்ளை appeared first on Dinakaran.

Related Stories: