தக்கலை கேரளபுரம் சாலையில் பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

தக்கலை : தக்கலை கேரளபுரம் சாலையில் ₹1.55 கோடியில் பாலம் கட்டும் பணி இழுத்தடிக்கப்பட்டு வருவதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். குமரி மாவட்டத்தில் கடந்த 2021ல் ஏற்பட்ட பெருமழையால் தக்கலை கேரளபுரம் சாலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் உள்ள குளங்கள், வாய்க்கால்களில் இருந்து வந்த மழை நீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது. இதனால் இந்த சாலை அப்போது துண்டிக்கப்பட்டது. பல மின் கம்பங்களும் பாதித்த நிலையில் இப்பகுதியில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது, இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வீ்ட்டு மனைகளாக மாறியதால் வழக்கம் போல் மழைநீர் வடிந்து செல்லும் நீர்வழிப்பாதைகள் அடைப்பட்டன. இதனால் மழைநீர் வழிந்தோட முடியாமல் வீடுகளுக்குள் புகுந்தது.

இந்நிலையில் மழை நீர் வழிந்தோடும் வகையில் இரண்டு சிறு பாலங்கள் சாலையின் குறுக்கே அமைத்து பக்கச் சுவர் கட்டுவதற்காக நெடுஞ்சாலை துறை ரூ.1.55 கோடி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பணிகள் தொடங்கின. பணியினை 6 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாலம் கட்டுமான பணி தொடங்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் தக்கலையில் கேரளபுரம், திருவிதாங்கோடு வழியாக செல்லும் வாகனங்கள் அழகியமண்டபம் வழியாக செல்லும் வகையில் மாற்றி விடப்பட்டன. ஆனால் ஒரு பாலம் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் அதன் பணி முடிந்த பிறகு 10 நாட்கள் இச்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

தற்போது இரண்டாவது பாலம் கட்டுவதற்காக தோண்டிய நிலையில் பணிகள் நடைபெறாமல் சாலை முழுவதும் மண்குவியலாக உள்ளது. பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன், இந்த சாலையின் வழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால். கேரளபுரம், சங்கரன்காவு, திருவிதாங்கேடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அவரச தேவைகளுக்கு தக்கலை வர வேண்டுமானால் அழகியமண்டபம், பரைக்கோடு, மணலி வழி சுற்றி வரவேண்டியுள்ளது.

பாலம் பணி நடைபெற உள்ள இடத்தில் ஒற்றையடிபாதை உள்ளதால் பாதசாரிகள், டூவீலர்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் பகல் நேரங்களில் செல்லமுடியும். இரண்டு பாலத்தையும் ஒரே நேரத்தில் கட்டியிருந்தால் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாலம் வேலை மெதுவாக நடைபெறுவது பொது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக தரப்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே பணியினை விரைந்து முடித்திட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post தக்கலை கேரளபுரம் சாலையில் பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: