குழந்தை திருமணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி குழந்தை திருமணம் தொடர்பாக சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்றதாக குற்றம்சாட்டி இருந்தார். அவரது புகாருக்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் கேள்விக்கு உரியப்பதில் அளித்தும் அவர் அபாண்டமாக பொய் பேசுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சாடியிருந்தார். இதனை அடுத்து ஆளுநர் புகார் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் சிதம்பரம் தீட்சிதர்கள், மருத்துவக்குழு போலீசாரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் விசாரணை நடத்தினார்.
இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். இந்த நிலையில் நேற்று மதியம் தமது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தமது கருத்து ஊடங்கங்களில் மாற்றி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குழந்தை திருமணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது அனைத்தும் உண்மை என கூறியுள்ள அவர் இது தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். நாளிதழுக்கான பேட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தீட்சிதர்களுக்கு ஆதரவாக பேசியதாக குற்றசாட்டு எழுந்தது.
பின்னர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் தமக்கு நடைபெற்றதும் குழந்தை திருமணம் தான் என கூறியதும் சர்ச்சையானது. ஆளுநர் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறாரா? என அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தை திருமணம் குறித்து விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் 24 மணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றி கொண்டிருப்பதால் அவருக்கு ஏதேனும் நெருக்கடி கொடுக்கப்பட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
The post சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்த விவகாரம்: 24 மணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றியதால் மீண்டும் சர்ச்சை..!! appeared first on Dinakaran.
