சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா; முன்னேற்பாட்டு பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை: சோலார் மின்விளக்கு, குடிநீர் வசதி வேண்டும்

வத்திராயிருப்பு: சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள் பிரதோசத்திற்கு 2 நாள் என மாத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் பிரசித்தி பெற்ற திருவிழாவாக ஆடி அமாசாசை திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வரும் ஜூலை 17 ம் தேதி ஆடி மாதம் முதல் தேதியில் சர்வ அமாவாசை நாள், ஆகஸ்ட் 16ம் தேதி ஆடி 31 ம் தேதி ஆடிஅமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.

ஆனால் வண்டிப்பண்ணையில் உள்ள தற்காலிக பஸ்டாண்டு எந்தவித வேலையும் நடைபெறாமல் சீரமைப்படாமல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் உள்ளது. தற்காலிக பஸ்டாண்டை உடனடியாக நிரந்தர பஸ்நிலையமாக மாற்ற வேண்டும். ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி குளியல் தொட்டிகள் வசதி பக்தர்கள் தங்குவதற்கான பெரிய அறைகள் பஸ்களில் ஏறிச் செல்வதற்கு நிழற்குடைகள், அமைக்க வேண்டும்.அ தே போல் சோலார் மின் விளக்குகள் மருத்துவக்குழுவினர் கொண்ட மருத்துவ முகாம், தற்காலிக காவல் நிலையம் போக்குவரத்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாட்டு பணிகளை உடடினயாக தொடங்க வேண்டும்.

மேலும் மகாராஜபுரம் விலக்கிலிருந்து மகாராஜபுர்ம வரை செல்லக்கூடிய சாலை குறுகலாக உள்ளதால் சாலையை அகலப்படுத்தி மகாராஜபுரம் வரை சோலார் மின் விளக்கு வசதி ஏற்படுத்துவதோடு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் தனியார் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடந்த ஆண்டு ஆடி அமாவாசையின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மந்தித்தோப்பு தாணிப்பாறை அடிவாரப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தங்கக்கூடிய இடங்களுக்கு பக்தர்கள் வரும் வாகனங்கள் 6 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்படுவதால் பக்தர்கள் கொண்டுவரக்கூடிய சாமான்கள் பல்வேறு விதமான பொருட்களை அங்கிருந்து சுமந்து கொண்டு தங்கள் இருப்பிடத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதோடு தற்போதைய நிலையில் தனியார் இடங்களில் வாகனங்கள் நிறுத்தமுடியாதநிலை எற்பட்டுள்ளது ஏனென்றால் அவர்கள் இந்த இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததால் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. நிரந்தரமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிக பஸ்டாண்டு பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறதா என்பதை வருவாய்த்துறை கணக்கீடு செய்து அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கும் பட்சத்தில், அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்தால் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் தோட்டங்களில் தங்கும் பக்தர்கள் வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

அதே வேளையில் போக்குவரத்திற்கு சிரமம் இல்லாத நிலை ஏற்படும். தற்காலிக பஸ்டாண்டில் இருந்து தாணிப்பாறை விலக்கு வரை சாலைகளை இருபுறமும் அகலப்படுத்தி வாகனங்கள் சிரமமின்றி விலகிச் செல்வதற்கு இப்போதிருந்தே வேலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்க வேண்டும். ஏனென்றால் போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்பட்டு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடியில் சிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்காலிக பஸ்டாண்டில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக தொடங்க வேண்டும். ஆடியில் இரண்டு அமாவாசைகள் வந்தாலும் முதலில் வரும் அமாவாசைக்கு ஓரளவு கூடம் இருக்கும். ஆகஸ்ட் 16ம் தேதி வரக்கூடிய ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை தற்போதைய நிலையில் இருந்து தொடங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

The post சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா; முன்னேற்பாட்டு பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை: சோலார் மின்விளக்கு, குடிநீர் வசதி வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: