உங்களை நம்பித்தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள் பள்ளி வாகனங்களை இயக்கும்போது அவசரம், கவன குறைவு இருக்கக்கூடாது

*டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

வேலூர் : பள்ளி வாகனங்களை இயக்கும்போது அவசரம், அசதி, கவன குறைவு மற்றும் செல்போனில் பேசுதலை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
தமிழகம் முழுவதும் வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை வருடாந்திர ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி தாலுகாவில் இயங்கி வரும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான வாகனங்களை வருடாந்திர ஆய்வு செய்யும் பணி காட்பாடி சன்பீம் பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பள்ளி, கல்லூரி டிரைவர்கள் மத்தியில் கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை இயக்கும்போது மாணவர்களை கவனத்துடன் அழைத்துச்செல்ல வேண்டும். அவர்களது பெற்றோர் உங்களை நம்பிதான் வாகனங்களில் அனுப்புகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாகனங்களில் இருந்து இறங்கி விட்டனர் என்பதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும்.

அனைத்து பள்ளி வாகனங்களும் இம்மாத இறுதிக்குள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் போது சாலையில் வேடிக்கை பார்ப்பது போன்ற கவனச்சிதறல் கூடாது. குறிப்பாக அசதியான நேரத்தில் ஓட்டுவது, செல்போன் பேசியபடி ஓட்டுவது, போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். அனைத்து வாகனங்களையும் அவசரமின்றி, பொறுமையாக சரியான வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களை இயக்கும்போது அதன் டிரைவர்கள் தினமும் ஜன்னல், கதவு, படி ஆகியவை சரியான முறையில் உள்ளதா? என ஆய்வு செய்த பின்னரே இயக்க வேண்டும். அவ்வாறு பாதிப்பு இருந்தால் அதனை சரி செய்த பிறகே மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வாகனங்களை பொறுமையாகத்தான் இயக்க வேண்டும். சென்னையை காட்டிலும் வேலூரில் போக்குவரத்து நெரிசல் குறைவுதான். போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பள்ளி பஸ் டிரைவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து பள்ளி வாகனங்களில் ஏறிச்சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், வட்டார போக்குவரத்து குழு ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேஷ்கண்ணா, தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறைகள் இருந்த 23 பஸ்கள் திருப்பி அனுப்பி வைப்பு

வேலூர், காட்பாடி, அணைக்கட்டு தாலுகாவில் உள்ள 386 பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயங்கி வருகிறது. நேற்று நடந்த முகாமில் மொத்தம் 261 வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் குறைபாடுகளுடன் வந்த 23 வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். குறைபாடுகளை சரிசெய்து கொண்டுவந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். வரும் 31ம் தேதிக்குள் அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களும் தணிக்கைக்கு உட்படுத்திய பிறகே அவற்றில் மாணவர்களை ஏற்ற வேண்டும் என தெரிவித்தனர். கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாவில் உள்ள வாகனங்கள் நாளை தணிக்கை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உங்களை நம்பித்தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள் பள்ளி வாகனங்களை இயக்கும்போது அவசரம், கவன குறைவு இருக்கக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: