நத்தம் அருகே சேத்தூர் ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்: பார்வையாளர்கள் உற்சாகம்

 

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே, சேத்தூர் ஊராட்சியில் சொறிப்பாறைப்பட்டி சங்கரன்பாறை கிராமம் உள்ளது. இங்குள்ள முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இப்போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் நத்தம், கொசவபட்டி, புன்னப்பட்டி மற்றும் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 400 காளைகளும், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் 20 பேர் கொண்ட குழுவினராக களம் இறக்கப்பட்டனர். முதலில் கோயில் மாடு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது திமிறிய காளைகளை வீரர்கள் அடக்கியும், வீரர்களுக்கு சவால் விடும் வகையில் சீறிப் பாய்ந்து பிடிபடாமல் சென்ற காளைகளும் களத்தில் காணப்பட்டன. இவற்றில் பிடிபடாத மாடு உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, கட்டில் ஆகிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக காளைகளுக்கான மருத்துவ பரிசோதனையை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் திருவள்ளுவன் தலைமையில், சிலுவத்தூர் கால்நடை உதவி மருத்துவர் ராஜா உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

நத்தம் வட்டார மருத்து அலுவலர் மேற்பார்வையில், கோசுகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக் குழுவினர் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் ஏடிஎஸ்பி வெள்ளைச்சாமி, ரூரல் டிஎஸ்பி உதயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

The post நத்தம் அருகே சேத்தூர் ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்: பார்வையாளர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: