கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்-சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் ரோஜா பூங்காவில் தற்போது பூத்து குலுங்கும் ரோஜாப்பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் 3 பூங்காக்கள் உள்ளன. இதில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த பூங்காவில் 1,500 வகையான சுமார் 16,000 ரோஜா செடிகள் உள்ளன. தற்போது கோடை சீசன் களை கட்டி உள்ள நிலையில், இந்த செடிகளில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன. குறிப்பாக பூங்காவின் முகப்பு பகுதியில் உள்ள அனைத்து செடிகளிலும் ரோஜாப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூங்காவின் உட்பகுதியில் உள்ள ரோஜாக்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன.

பல வண்ணங்களில் பூக்கும் பல வகையான ரோஜாக்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரோஜா பூங்காவில் நெதர்லாந்து நாட்டின் லில்லியம் மலர்களின் செடிகளும் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பூக்களும் பூத்துக் குலுங்குகின்றன. தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் ரோஜா பூக்கள் உதிரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ரோஜா பூங்காவின் உட்பகுதியில் வசதிகளை மேம்படுத்த வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்-சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Related Stories: