மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவியை போட்டிபோட்டு அழைக்கும் கல்லூரிகள்

சென்னை: மதிப்பெண் அடிப்படயில் முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவி காயத்ரியை கட்டணம் இல்லாமல் பயில கல்லூரிகள் பல அழைப்பு விடுக்கின்றன. பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் 86.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பெரம்பூரில் உள்ள எம்.எச் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவி காயத்ரி 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். கணக்கியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மற்றும் தமிழ், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாணவி காயத்ரி தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பெரம்பூர் அருகே சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறேன். பொருளாதார சூழ்நிலையும் பொருட்படுத்தாது பெற்றோர் என்னை படிப்பதற்கு ஊக்குவித்தனர். தந்தை நீலகண்டன் பிரசிடென்சி கிளப்பில் நூலக உதவியாளராகவும், அம்மா லட்சுமி பழங்கள் மற்றும் காய்கறிக் கடையில் காசாளராகவும் பணிபுரிகிறார். மாநகராட்சி பள்ளியில் படித்து இந்த வெற்றியை பெற்றிருப்பது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. என் பள்ளி ஆசிரியர்கள் எனக்கு நல்ல ஊக்கத்தை அளித்தனர். உயர்க்கல்வியாக பி.காம், சி.ஏ படிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார். மாணவியின் தாயார் லட்சுமி கூறுகையில், ‘‘மகளின் மேற்படிப்பிற்காக என்ன செய்ய போகிறோம், எந்த கல்லூரியில் சேர்ப்பது, என்று கவலையில் இருந்தேன்.

ஆனால் தற்போது பல கல்லூரிகளில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. கட்டணம் இல்லாமல் உங்கள் மகளை எங்கள் கல்லூரியிலேயே சேர்த்துக்கொள்கிறோம் என கூறுகின்றனர். இவற்றை கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார். மாணவி காயத்ரிக்கு பல்வேறு கல்லூரிகளில் இருந்து அழைப்பு வந்த நிலையில், சென்னை, எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் மைக் முரளீதரன், மாணவியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து, தங்கள் கல்லூரியில் படிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். முழு உதவித்தொகை வழங்க தயாராக உள்ளதாகவும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

The post மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவியை போட்டிபோட்டு அழைக்கும் கல்லூரிகள் appeared first on Dinakaran.

Related Stories: