கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து பாதுகாக்க தீவிர நடவடிக்கை-கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஜல் சக்தி அபியான்-2023ன் கீழ், குடிநீர் ஆதாரங்கள் கண்டறிதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து பாதுகாத்தல், ஆழப்படுத்துதல் தொடர்பான திட்ட அறிக்கைகளை தயாரித்து, நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து திட்டங்கள் மூலம், குடிநீர் வழங்குவது புவி குறியீடு புகைப்படம் எடுத்து, பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதி உள்ளிட்ட அனைத்து துறை நிதி ஆதாரங்கள் மூலம், குடிநீர் தொடர்பான பணிகளான குழாய் மூலம் குடிநீர் வழங்குதல், சர்வே உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், குடிநீர் தரத்தை உறுதி செய்ய வேண்டும். நீர் கட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர் நிலைகளை ஆழப்படுத்துதல், மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கரைகளை மேம்படுத்துதல், தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நீர் நிலைகளை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், குப்பைகளை நீர்நிலைகளில் போடுவதை தடை செய்ய வேண்டும். பருவமழைக்கு முன் மற்றும் பின் வேதியியல், உயிரியல் ரீதியாக குடிநீர் தரத்தை கண்காணிக்க வேண்டும். வரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள், ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் திட்டம் தயாரித்தல் மற்றும் மேற்கொள்ள வேண்டும். வரும் அக்டோபர் மாதத்திற்குள், நீர் ஆதாரங்களை ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். நவம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்களுக்கு சிறப்பு கிராம சபை மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் நீர் ஆதாரங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்களை https://jsactr.mowr.gov.inல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், அதிக அளவில் செடிகள் நடவு செய்து, புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தோட்டக்கலைத்துறை, கல்வித் துறை மற்றும் நேரு யுவகேந்திரா துறை அலுவலர்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்மேலாண்மை தொடர்பான போதிய விளம்பரம் செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்து, அவர்களை திட்ட பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கார்க், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன் மறறும் உதவித் திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து பாதுகாக்க தீவிர நடவடிக்கை-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: