கோடை விடுமுறையால் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-களக்காடு தலையணைக்கும் படையெடுப்பு

வி.கே.புரம் : கோடை விடுமுறையால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கூட்டம் அலைமோதியதால் நீண்டவரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் களக்காடு தலையணைக்கும் மக்கள் படையெடுத்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில், ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம்.

கோடை காலங்களில் குற்றாலம், களக்காடு பகுதி அருவிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலையில், ஆன்மீக அருவி என்றழைக்கப்படும் அகஸ்தியர் அருவியில் மட்டுமே தண்ணீர் விழும் என்பதால் விடுமுறையில் மக்கள் அதிகளவில் வந்து செல்வார்கள். குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

நேற்று அகஸ்தியர் அருவியில் கூட்டம் அலைமோதிய நிலையில், ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் நீண்டவரிசையில் காத்திருந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அருவிக்கு செல்லும் வாகனங்களை பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள், தீப்பெட்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

அருவிப் பகுதியில் சுற்றுலா பயணிகள் சோப், ஷாம்பு பயன்படுத்தாதவாறு வனத்துறை ஊழியர்கள் கண்காணித்தனர்இதேபோல் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மூலிகைகளை தழுவிய படி, அதிக குளிர்ச்சியுடன் ஓடி வரும் தண்ணீரில் குடும்பத்தினர்கள், நண்பர்களுடன் ஆற்றில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

இங்குள்ள சிறுவர் பூங்கா, சோதனைச் சாவடி, ஆற்றுப் பகுதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் தலையணையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதையொட்டி வனத்துறையினர் தீவிர கண்காணிப்புடன் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

The post கோடை விடுமுறையால் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்-களக்காடு தலையணைக்கும் படையெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: