திருமூர்த்தி, அமராவதி அணைகளை பயணிகள் சுற்றி பார்க்க சர்க்யூட் பஸ் இயக்கம் எப்போது?

*சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

உடுமலை : திருமூர்த்தி, அமராவதி அணைகளை பயணிகள் சுற்றி பார்க்க சர்க்யூட் பஸ் இயக்கப்படுமா? என சுற்றுலா ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக அமராவதி அணை, திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. உடுமலையை மையமாக கொண்டு திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி அமணலிங்கேஸ்வரர் கோவில் போன்றவற்றுக்கும் அமராவதி அணை அமராவதி அணை பூங்கா முதலைப்பண்ணை உள்ளிட்டவைக்கும் தேவனூர் புதூர் வழியாக ஆழியார் அணை வரை சென்று திரும்பும் வகையில் சர்க்யூட் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாள்தோறும் சர்க்யூட் பஸ்கள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. 150 ரூபாய் கட்டணத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களை சர்க்யூட் பஸ் மூலம் ஏழை எளிய சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் அனைத்தும் உடுமலை தாலுகாவை சுற்றியே அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமராவதி அணை, அமராவதி அணை பூங்கா, முதலை பண்ணை உள்ளிட்டவை அமைந்துள்ளது. இதுபோல திருமூர்த்தி அணையும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளம்,வண்ண மீன்கள் காட்சியாகம், பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில், திருமூர்த்தி அணை பூங்கா உள்ளிட்டவையும் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளாகவே உள்ளது.

இதேபோல தலி ரோட்டில் இருந்து தேவனூர் புதூர் வழியாக ஆழியார் அணையையும், குரங்கு அருவி, அறிவுத்திருக்கோயில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில், உள்ளிட்டவற்றையும் சுற்றுலா பயணிகள் சர்க்யூட் பஸ் வசதி செய்து கொடுத்தால் எளிதாக கண்டு ரசிக்க முடியும். மேலும் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதி மறையூர் மூணார் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் கோடந்தூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்டவற்றுக்கும் மேற்கண்ட வழித்தடத்தில் சாலையோரம் உலா வரும் புள்ளி மான்கள் கூட்டம் காட்டு யானைகள் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்க ஏதுவாக குறைந்த செலவில் சர்க்யூட் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்கள் பேருந்துகளையே சுற்றுலா பயணங்களுக்காக அதிகம் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அருவிகள், அணைகள், ஆறுகள், கோயில்கள் வனவிலங்குகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பு மலை பயணம் உள்ளிட்ட அனைத்துக்கும் மையமாக உடுமலை தாலுகா திகழ்வதால் உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் நான்கு சர்க்யூட் பஸ்கள் இயக்கினால் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு அதிக வருவாய் கிடைப்பதோடு சுற்றுலா தளங்களை குறைந்த செலவில் பொதுமக்கள் குழந்தைகளுடன் கண்டுகளிக்க முடியும்.

கோடை விடுமுறையின் போது இது போன்ற சர்க்யூட் பஸ் வசதி செய்து கொடுப்பதன் மூலம் அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும், வனத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். சுற்றுலா துறையும் வளர்ச்சி பெறும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கோடை விடுமுறையின் போது சர்க்யூட் வசதி செய்து கொடுத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது சுற்றுலா ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post திருமூர்த்தி, அமராவதி அணைகளை பயணிகள் சுற்றி பார்க்க சர்க்யூட் பஸ் இயக்கம் எப்போது? appeared first on Dinakaran.

Related Stories: