திருப்புத்தூர் அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கண்மாய் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஓலைக்குடிப்பட்டி கண்மாயில், கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்தது. அப்போது 25க்கும் மேற்பட்ட வட்டக்கல் அமைப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட சேதமடைந்த சிறிய, பெரிய வடிவிலான முதுமக்கள் தாழி இருப்பதை கண்டறிந்தனர். அதன் அருகில் முன்னோர்கள் பயன்படுத்திய பல வகையான உடைந்த மண்பாண்ட பாகங்களும் கிடைத்துள்ளன.

அவை தட்டு, உடைந்த குடிநீர் குவளை, சிறிய மண் கலயங்களின் பாகங்கள் ஆகும். இப்பகுதி பெருங்கற்கால முன் வரலாற்று கால சங்க காலமான கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 3ம் நூற்றாண்டு வரை இடுகாட்டுப் பகுதியாக இருந்திருக்க வேண்டும். வட்டக்கல், முதுமக்கள் தாழி அமைப்புமுறை என்பது 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இதுபோன்ற வட்டக்கல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தான் கிடைத்துள்ளது. இப்பகுதியில் மேலும் முறையான கள ஆய்வு மற்றும் அகழாய்வு மேற்கொண்டால் பல தொல்லியல் வரலாற்று எச்சங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

The post திருப்புத்தூர் அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: