சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து புனரமைக்க வேண்டும் ஆய்வுகூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

கரூர், செப்.24: கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து புனரமைக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாணவர்களின் வருகை தரம், அரசு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி கற்கும் சூழலை உருவாக்குதல், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் பாட வகுப்பினை கண்காணித்து அதன் அறிக்கையை பதிவேடுகளில் பதிவிட வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார். மேலும், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து புனரமைத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர்கள் மந்திராசலம், வாணி ஈஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் கீதா, கோட்டாட்சியர் ரூபினா உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: