60 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரவக்குறிச்சி நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?

அரவக்குறிச்சி, செப்.23: அறுபது ஆண்டுகாளாக வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வரும் அரவக்குறிச்சி நூலகத்திற்கு விசாலமான சொந்தக் கட்டடம் தேவை என்று வாசக வட்டத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பொதுநூலகத்துறையின் கிளை நூலகம் 1962ஆம் ஆண்டு பெரிய கடைவீதியில் வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளாக நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர். வசதி உள்ளவர்கள் தினசரி நாளிதழ்கள் மற்றும் வார மற்றும் மாத இதழ்களை சொந்தமாக வாங்கி வீட்டிலேயே வைத்து படிக்கின்றனர். ஆனால் செய்தித்தாள்களை வாங்கி படிக்க முடியாத ஏழை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகங்களுக்கே வந்து படித்து செல்கின்றனர்.

நூலக உறுப்பினராக உள்ள வாசகர்கள் புத்தகங்களை எடுத்துச் சென்று வீட்டிற்க எடுத்துச் சென்று படிப்பது வழக்கம். இந்நிலையில் அரவக்குறிச்சியில் உள்ள நூலகம் அவ்வப்பொழுது இடம் மாறினாலும் அதே பகுதியில் வாடகைக் கட்டடத்திலேயே தொடர்ந்து இயங்கி வருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள பழமையான நூலகங்களில் இதுவும் ஒன்று. இந்த நூலகத்தில் அரசியல், சட்டம், மருத்துவம், அறிவியல், வரலாறு, கம்ப்யூட்டர், தேசத் தலைவர்களின் சுயசரிதைகள், சுயமுன்னேற்ற நூல்கள், தொழில் முயற்ச்சிக்கான நூல்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ், போலீஸ் தேர்வுக்கான நூல்கள், ரயில்வே, ஆர்மி, அஞ்சலக, விஏஓ தேர்வுகள், கதை, கவிதை, கட்டுரைகள், ஆன்மீகம், மொழியில், பல்வேறு தேர்வுகளுக்கான ரெபரன்ஸ் புத்தகங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் 37,000 நூல்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் தினசரிகள், வார மாத இதழ்கள் என்று 50க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் வாங்கப்பபட்டு வாசகர்களுக்கு வாசிக்க வழங்கப்படுகிறது. தினசரி 100க்கும் மேற்பட்ட வசகர்கள் நூலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நூலகத்தில் 4240 நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர்.

தற்பொழுது நூல் வாசிப்பை ஊக்குவிக்கவும், அதிகரிக்கவும் நூலகத்துறை மூலமாக வருடத்திற்கு 3000 கும் மேற்பட்ட புதிய நூல்களை அரசு நூலகத்திற்கு வழங்குகிறது. இங்கு இணையதள வசதயும் உள்ளது. இந்நிலையில் நுலகத்தினுள் இடப்பற்றாக்குறையை போக்க வாடகைக் கட்டத்தை விரிவு படுத்த முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக வாசக வட்டத்தினர் கூறியதாவது: அரவக்குறிச்சி கிளை நூலகம் தற்போது ஒரு மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு செல்லும் மாடி படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளதால் வயதான வாசகர்கள், சிறுவர்கள் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாகவே சிலர் நூலகத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நூலகத்தை இடம் மாற்றி தரை தளத்தில் அமைக்க வேண்டும் என்று பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாசகர்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தும் பல ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாசகர்கள் வேதனைப்படுகின்றனர்.

அரவக்குறிச்சி தாலுகா அலுவக வளாகத்தில் அரசுக்கு சொந்தமாக இடம் ள்ளதால் அங்கு அனைத்து வசதிகளுடன் புதிய நூலக கட்டிடம் கட்டலாம். ஆகையால் அறுபது ஆண்டுகாளாக குறுகலான போதிய இடவசதி காற்றோற்றட்ட வசதி இல்லாத வாடகை கட்டடத்திலேயே இயங்கி வரும் அரவக்குறிச்சி நூலகத்திற்கு விசாலமான சொந்தக் கட்டடம் தேவை என்று வாசக வட்டத்தினர் மற்றும் பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். மாவட்ட பொதுநூலகத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அரவக்குறிச்சி கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: