ஆலங்குடியில் சாக்கடையாக மாறி வரும் சாம்பிராணி குளம்-நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு

ஆலங்குடி : ஆலங்குடியில் கழிவு நீர் கலந்து சாம்பிராணி குளம் சாக்கடை குளமாக மாறி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று சாம்பிராணி குளம். சாம்பிராணி குளம் அமைந்துள்ள பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 100 ஏக்கர்களுக்கு மேல் முப்போக சாகுபடி நடைபெற்றது. இதற்கு தேவையான நீர் தேவையை சாம்பிராணி குளமே பூர்த்தி செய்து வந்தது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது. தற்போது இந்த குளம் தான் முற்றிலும் சாக்கடையாக மாறி மக்கள் பயன்பாட்டுக்கு உபயோகமற்றதாக இருக்கின்றது.ஆலங்குடி நகர் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்து பகுதிகளில் இருந்து வெளியேறும் மொத்த கழிவு நீரும் இந்த குளத்துக்கே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பி விடப்பட்டு வருகின்றது. தொழிற்சாலை கழிவு நீர் குளத்தில் கலப்பதால் குளத்து நீர் மாசடைந்து அதிலிருந்த நீர்வாழ் உரியினங்கள் முற்றிலும் அழிந்தது, இந்த தண்ணீரை விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாமல் போனதால் 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் பொய்த்து போனது, இதனால் முப்போகம் விளைந்த விவசாய நிலங்கள் விவசாயமின்றி கருவேல மரங்கள் மண்டி காடாக காட்சியளிக்கின்றது.கழிவு நீர் தொடர்ந்து குளத்தில் கலந்து வருவதால் குளத்தில் பாசி படர்ந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் இந்த குளத்தில் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தி ஆவதால் தோற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் நிலத்தடி நீரும் மாசடைய தொடங்கியுள்ளது.எனவே உடனடியாக ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் சாம்பிராணி குளத்தை சுத்தப்படுத்தி மக்கள் மற்றும் விவசாய பயன்பட்டுக்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஆலங்குடியில் சாக்கடையாக மாறி வரும் சாம்பிராணி குளம்-நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: