நமக்கு நாமே திட்டம் தொழில் கூட்டமைப்பினர், பிரதிநிதிகளுடன் ஆலோசனை \

கரூர், ஜன. 11: கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பினர், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளதாவது: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நல்ல உள்ளங்களின் நிதி பங்களிப்புடன், அரசின் நிதியும் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டமே நமக்கு நாமே திட்டமாகும். ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆகும் செலவில் மூன்று ஒரு பங்கு தொகையை பங்களிப்பாக அளித்தால், மீதமுள்ள இரண்டு பங்கு தொகையை அரசே வழங்கும். இதில், நீர்நிலைகள் புனரமைப்பு திட்டத்திற்கு மட்டும் திட்ட மதிப்பில் 50 சதவீத தொகையை பங்களிப்பாக அளிக்க வேண்டும்.

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை புனரமைத்தல், பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகளுடன் கூடிய பூங்காக்கள் அமைத்தல், பள்ளி&கல்லுாரி கட்டிடங்கள் கட்டுதல், சாலை மேம்பாடு, பொது சுகாதார மைய்கள், தெரு விளக்கு அமைத்தல், சிறுபாலங்கள் அமைத்தல், பொது கழிப்பிடங்கள் கட்டுதல், குழந்தை மையங்கள், சமூதாய கழிப்பிடங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. மக்கள் நலன் சார்ந்த இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ அமைப்பினர், பொதுத்துறை வங்கிகள் தங்களின் பங்களிப்பு நிதியை கொடுத்து உதவ முன்வரவேண்டும். ஒரு வார காலத்திற்குள் தங்களால் எந்தெந்த திட்டங்களுக்கு நிதி பங்களிப்பு வழங்க இயலும் என்பதை தெரிவித்தால் அரசுக்கு கருத்துரு அனுப்ப வசதியாக இருக்கும் என்றார். இந்த கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் புஷ்பராஜ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: