க.பரமத்தி அருகே அஞ்சூர் கிராம சுற்று வட்டாரத்தில் சரியான அளவில் குளோரினேஷன் செய்த குடிநீர் வினியோகிக்க வேண்டும்

க.பரமத்தி, டிச. 4: க.பரமத்தி அருகே அஞ்சூர் கிராம சுற்று பகுதியில் சரியான அளவில் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில் பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறு அத்தியாவசிய தேவைகளுக்கும் குடிநீருக்காக ஆறு நீரை குக்கிராம பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய பகுதியில் அவ்வப்போது வரும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை, மாலை திடீர் மழை, பகலில் வெயில் உள்ளிட்டவைகளால் மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி வருவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் சரியான அளவில் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் தண்ணீரால் பரவக்கூடிய காலரா, டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள்காமாலை உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ஊராட்சி குக்கிராமங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான ஆற்று குடிநீர் சப்ளை செய்யப்படுகிறதா என்பதை தினமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனையிட வேண்டும். அதிகாரிகளின் மெத்தன போக்கால் காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரில் சரியான அளவில் குளோரினேசன் செய்த குடிநீரை குடிநீர் வடிகால் வாரியம் விநியோகிக்க தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகம் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராம பகுதிகளில் பார்வையிட்டு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Related Stories: