கிருஷ்ணராயபுரத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

கரூர், ஏப்.13: கரூர்- திருச்சி பைபாஸ் சாலை கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே பேரூந்துகள் நின்று செல்லாத காரணத்தினால் பொதுமக்களும், பயணிகளும் திடீரென சாலை மறியிலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 10ம் தேதி முதல் பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு செல்லக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கரூர்-திருச்சி இடையே செல்லும் பெரும்பாலான பேரூந்துகள் குறிப்பிட்ட பகுதிகளில் நின்று செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.

கரூர்-திருச்சி பைபாஸ் சாலை கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, பழைய ஜெயங்கொண்டம், கோவக்குளம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக பஸ் நிறுத்தம் வந்து திருச்சியில் இருந்து கரூர் செல்லும் பேரூந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில், 100க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிறுத்தம் அருகே நின்று, பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற எந்த பஸ்சுமே நிற்காமல் சென்றது. இதனால், அவதிப்பட்ட பயணிகள் அனைவரும் நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மாயனூர் போலீசார், பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு செல்வதை தவிர்க்கும் காரணத்தினால் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. நாங்கள் அனைவரும் எப்படி கரூருக்கு செல்ல முடியும் என கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, கரூர் நோக்கி சென்ற பஸ்களை போலீசார் நிறுத்தி, குறிப்பிட்ட சிலரை ஏற்றி அனுப்பி வைத்ததோடு, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி இந்த பகுதியில் இருந்து பஸ் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து, பயணிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக கரூர்-திருச்சி சாலையில் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: