காமன்வெல்த் விளையாட்டு போட்டி; ஜூடோவில் 2 தங்கம்: ஹர்ஷ், அஸ்மிதா அசத்தல்: இந்தியா முன்னேற்றம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள், மகளிர் ஜூடோவில் இந்தியாவின் ஹர்ஷ் சிங், அஸ்மிதா டே தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.ஹர்ஷ், அஸ்மிதா, யாமினி ஆகியோர் நேற்று பைனலுக்கு முன்னேறியதால் குறைந்தபட்சம் 3 வெள்ளிப் பதக்கங்களை உறுதி செய்திருந்தனர். மகளிர் 48 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் களமிறங்கிய அஸ்மிதா கடுமையாகப் போராடி ஸ்காட்லாந்தின் சம்மர் ஷா சவாலை முறியடித்தார். அவர் பைனலில் கனடாவின் ஹெய்தி குவாச் சவாலை சந்தித்தார்.

தனது துடிப்பான துல்லிய தாக்குதலால் ஹெய்தியை நிலைகுலைய வைத்த அஸ்மிதா அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். ஆஸ்திரேலியாவின் பெட்ரோ கார்லோஸ் உடன் ஆண்கள் 60 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் நேற்று மோதிய ஹர்ஷ் அபாரமாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அடுத்து பைனலில் மற்றொரு ஆஸி. வீரர் ஜோஷுவா கட்ஸையும் வீழ்த்திய ஹர்ஷ் முதலிடம் பிடித்து அசத்தினார்.

காமன்வெல்த் ஜூடோவில் இந்திய வீரர், வீராங்கனை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், மகளிர் ஜூடோ 52 கிலோ எடைபிரிவு அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவின் டான்னே பிரெய்டென்பாச் சவாலை முறியடித்த இந்திய வீராங்கனை யாமினி பைனலில் இங்கிலாந்தின் அசெல்யா டோபார்க் உடன் மோதுவது குறிப்பிடத்தக்கது. ஹர்ஷ், அஸ்மிதா வென்ற தங்கப் பதக்கங்களால் இந்தியா பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியது.

* காமன்வ்வெல்த் தடகளம் கலப்பு 4X400 மீட்டர் ரிலே ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் பங்கேற இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. ஹீட் 2ல் பங்கேற்ற விஷால் டி.கே., அனிசா பாபு, ராஜேஷ் ரமேஷ், ரஷ்தீப் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம், 20.98 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து 4வது இடம் பிடித்தது. ஹீட் 1 முடிவுகளையும் சேர்த்து 7வதாக வந்த இந்திய அணி பைனல் வாய்ப்பை உறுதி செய்தது. இரண்டு பிரிவிலும் டாப் 3 அணிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட அடுத்த 2 அணிகள் என மொத்தம் 8 அணிகள் பைனலில் களமிறங்க உள்ளன.

Related Stories: