கிரிக்கெட்டில் இருந்து ரகானே திடீர் ஓய்வு

 

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய அணி முன்னாள் நட்சத்திரம் அஜிங்க்யா ரகானே (38 வயது) அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டியில் 5077 ரன் (அதிகம் 188, சராசரி 38.46, சதம் 12, அரை சதம் 26), 90 ஒருநாள் போட்டியில் 2962 ரன் (அதிகம் 111, சராசரி 35.26, சதம் 3, அரை சதம் 24), 20 டி20ல் 375 ரன் (அதிகம் 61, சராசரி 20.83) எடுத்துள்ளார்.

2020-21ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ரகானே தலைமையில் விளையாடிய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அதிலும் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 36 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அதிலிருந்து மீண்டும் அணியை வெற்றிப்பாதையில் வழி நடத்தியது ரகானேவின் தலமைப் பண்புக்கு சான்றாக அமைந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டுமல்லாமல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள ரகானே பிசிசிஐ, சக வீரர்கள், ரசிகர்கள், தனது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி 100 கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ரகானே இருந்து வந்த நிலையில், ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: