காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், 2 வெள்ளி: குத்துச்சண்டையில் மேலும் 6 பதக்கம் உறுதி

கிளாஸ்கோ: 23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கத்தை வேட்டையாடி வருகின்றனர். 7வது நாளான நேற்று இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளிபதக்கம் கிடைத்தது.

இந்தியாவின் மாற்றுத்திறனாளி தடகள வீரர் திலீப் மஹாது காவித் ஆண்களுக்கான 100 மீட்டர் டி47 ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பந்தயத் தூரத்தை வெறும் 10.71 வினாடிகளில் கடந்து, புதிய காமன்வெல்த் சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் பாரா-தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே போட்டியில் மற்றொரு வீரரான முகமது பாசில் 10.83 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். முதல் 2 பதக்கத்தையும் இந்திய வீரர்களே கைப்பற்றி அசத்தினர். இங்கிலாந்தின் கெவின் சாண்டோஸ் (10.85 வினாடிகள்) வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் முரளி சங்கர் 8.09 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதல் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக அவர் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் (8.08 மீ) வென்றிருந்தார். நீளம் தாண்டுதலில் ஜமைக்காவின் தாஜே கேல் 8.15மீட்டர் தாண்டி தங்கத்தையும், ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கன்சி 8.08 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கமும் வென்றனர். இந்தியாவின் மற்றொரு இளம் வீரரான லோகேஷ் சத்யநாதன் 7.97 மீட்டர் தூரம் பாய்ந்து 5வது இடத்தைப் பிடித்தார். இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது.

வெற்றியில் பெரிய சுவாரஸ்யம் தெரியவில்லை
தங்க பதக்கம் வென்ற திலீப் மஹாது காவித் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது 5 வயதில் மரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில், முறையான மருத்துவ வசதி கிடைக்காததால் இவருடைய வலது கை முழங்கைக்குக் கீழே அகற்றப்பட்டது. தங்கம் வென்ற அளித்த பேட்டி: மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா போட்டிகளில் பங்கேற்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அதில் வெற்றி பெறுவதில் எனக்குப் பெரிய சுவாரஸ்யம் தெரியவில்லை. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், எந்தக் குறைபாடும் இல்லாத சாதாரண தடகள வீரர்களுடன் நேருக்கு நேர் போட்டியிடுவதையே நான் விரும்புகிறேன். அதுவே எனக்குள் ஒரு பெரும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் விதைக்கிறது, என்றார்.

குத்துச்சண்டையில் மேலும் 6 பதக்கம் உறுதி
காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டையில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6பேர் கால்இறுதியில் வெற்றிபெற்று பதக்கத்தை உறுதி செய்தனர். மகளிர் 51 கிலோ எடை பிரிவில் சாக்‌ஷி சவுத்ரி வட அயர்லாந்தின் கெய்ட்லின் பிரையர்ஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். 70 கிலோ எடை பிரிவில் அருந்ததி சவுத்ரி நியூசிலாந்தின் நியூசிலாந்தின் மோர்கன் ஹென்டர்சனையும, ஆடவர் 60 கிலோ எடை பிரிவில் சச்சின் சிவாச், போட்ஸ்வானாவின் ட்ரெஷர் மொரேமியை 5-0 என்ற புள்ளி கணக்கிலும் வென்று அரையிறுதிக்கு தடம்பதித்தனர்.

ஆடவர் 80 கிலோ எடைபிரிவில் அங்குஷ் யாதவ், சீஷெல்ஸ் நாட்டின் ஜேட் மைக்காக்கை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அங்குஷ் யாதவ் நடுவர்களின் ஒருமனதான முடிவின்படி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார். ஏற்கனவே முதல் நாளிலேயே நட்சத்திர வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று இந்தியாவிற்கான பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இவர்களை தவிர பிரீத்தி பவார் (54கிலோ ), பிரியா கங்காஸ்(60கிலோ), ஜடுமணி சிங் (55கிலோ) ஆகியோர் நேற்று முன்தினம் கால்இறுதியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். குத்துச்சண்டையை பொறுத்தவரை அரையிறுதி தோற்றாலும் வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்பதால் இந்தியாவுக்கு 9 பதக்கங்கள் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. இதில் வெண்கலத்தை வெள்ளியாக உறுதி செய்யப்போவது யார் , யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Related Stories: