அங்குஷ், பிரீத்தி பைனலுக்கு முன்னேற்றம்: குத்துச்சண்டையில் 2 வெள்ளி உறுதி

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் நடைபெறும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய குத்துச்சண்டை வீரர் அங்குஷ் பாங்கல், வீராங்கனை பிரீத்தி பவார் பைனலுக்கு முன்னேறியதை அடுத்து குறைந்தபட்சம் 2 வெள்ளிப் பதக்கங்கள் உறுதியாகி உள்ளது. கிளாஸ்கோ தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்திய பாக்சிங் வீரர், வீராங்கனைகள் நேற்று 10 பிரிவுகளில் அரையிறுதி சவாலை சந்தித்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இவர்கள் ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்திருந்தாலும், அரையிறுதியில் வென்றால் தங்கம் அல்லது வெள்ளிக்காக பைனலில் மல்லுக்கட்டலாம் என்ற உத்வேகத்துடன் நேற்று களமிறங்கத் தயாராகினர். ஆண்கள் 80 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் கனடாவின் ஜோஷுவா ஒபோரியுடன் மோதிய அங்குஷ் பாங்கல் 3 சுற்றிலும் அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தி பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்தின் திமேஜி ஷிட்டு 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் பால் ட்ரெய்னரை வீழ்த்தினார். அரையிறுதியில் தோற்ற ஜோஷுவா, ட்ரெய்னர் இருவரும் வெகலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர். இறுதிப் போட்டியில் அங்குஷ் பாங்கல் திமேஜி ஷிட்டு மோதவுள்ளனர். மகளிர் 54 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் களமிறங்கிய பிரீத்தி பவார் ஜாம்பியாவின் கேதரின் எம்வாபேவுக்கு எதிராக மூன்று சுற்றிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றார்.

முன்னதாக நடந்த முதல் அரையிறுதியில் இங்கிலாந்தின் லாரென் மெக்கியுடன் மோதிய கனடா வீராங்கனை ஸ்கார்லெட் சவன்னா டெல்கடோ 4-1 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கேதரின், மெக்கி இருவரும் வெண்கலப் பதக்கம் பெற்ற நிலையில், பிரீத்தி டெல்கடோ பைனலில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

Related Stories: