கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஆண்கள் T47 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர்கள் திலீப் மஹது காவிட் தங்கப் பதக்கமும், முகமது பாசில் மோர்சிங்கனாகத் வெள்ளிப் பதக்கமும் வென்று காமன்வெல்த் பாரா தடகளத்தில் வரலாற்று சாதனை படைத்தனர்.திலீப் காவிட் பந்தய தூரத்தை 10.71 விநாடியில் கடந்து போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.
முகமது பாசில் (10.83 விநாடி) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மூன்றாவதாக வந்த இங்கிலாந்தின் கெவின் சான்டோஸ் (10.85 விநாடி) வெண்கலப் பதக்கம் பெற்றார்.நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கப் பதக்கம் இது. ஏற்கனவே மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு (48 கி.), பாராதடகளம் மகளிர் குண்டு எறிதல் எப்.57 பிரிவில் ஷர்மிளா தன்கர் தங்கம் வென்றிருந்தனர்.இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் 8வது இடத்துக்கு முன்னேறியது.
ஜனாதிபதி வாழ்த்து: ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த திலீப் காவிட், முகமது பாசில் மற்றும் ஆண்கள் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய முரளி ஸ்ரீசங்கர் மூவருக்கும் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்திய சாதனையாளர்களை வாழ்த்தியுள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த திலீப் காவிட் ஒரு விபத்தில் தனது இடது கையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது பாசிலும் கையில் குறைபாடு உள்ளவர் தான்.
பல்வேறு தடைகளையும் மீறி இருவரும் காமன் வெல்த் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அடுத்து ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஆசிய விளையாட்டு போட்டி (செப்.- அக்.) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 பாராலிம்பிக்சில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்று காவிட் தெரிவித்துள்ளார்.
