சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த ‘முதலமைச்சரின் காலை உணவு’ திட்டத்தின் பெயரை ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. நகர் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்ததையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை அரசு பள்ளியில் 15.9.2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விரிவுபடுத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் தினமும் 19.34 லட்சம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் அறிமுகப்படுத்த முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிப்பதுடன், பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து, இடைநிற்றலை குறைந்துள்ளது. இந்நிலையில், 2026ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக விஜய் பதவியேற்றார். இதனால், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கலை உணவு திட்டம் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த திட்டத்தை தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.
மேலும், `முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும், என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
* தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயரிடப்படுகிறது.
* தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
* மாணவ, மாணவிகளின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ, மாணவிகள் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில் ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதை கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343 கோடியே 55 லட்சம் செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது. 2026-27ம் நிதியாண்டுக்கு இத்திட்டத்திற்காக ரூ.217 கோடியே 63 லட்சத்து 9 ஆயிரத்து 395 நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* திமுக அரசின் திட்டங்கள் தொடர்ந்து பெயர் மாற்றம்
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்களின் பெயர்களை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெயர் மாற்றி அரசாணை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடங்கப்பட்டு பெரிதும் பேசப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம், தற்போது காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அரசு பேருந்துகளில் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த மகளிர் விடியல் பயணம் திட்டப் பெயரில் இருந்த விடியல் என்ற வார்த்தை நீக்கப்பட்டு, மகளிர் பயணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் பெயர் திறன் தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பான முந்தைய பதிவுகள் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெயர் இதுவரை மாற்றப்படவில்லை. ஆனால் இந்த பெயரையும் மாற்ற தவெக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதில், மதிப்புமிகு மகளிர் உரிமைத்தொகை என பெயர் மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
