பழநி: பழநியில் நடந்த ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் பதிவுத்துறை உயர்மட்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய கூடுதல் பதிவு தலைவர் சுதா மல்யா, உதவி பதிவு தலைவர்கள் பூங்கொடி, கண்ணன் அடங்கிய உயர்மட்ட விசாரணை குழு பத்திரப்பதிவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கடந்த 2 நாட்களாக பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தினர். 3வது நாளான நேற்றும் தீவிர விசாரணை நடத்தினர். காலை 7.30 மணிக்கே விசாரணை துவங்கியது. சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் முன்னதாகவே பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 3வது மாடியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலக அறையில் விசாரணை நடந்தது. அப்போது, இந்த பதிவு எந்த அதிகாரியின் ஒப்புதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது? ஆவணத்தை முதலில் யார் பெற்றனர், யார் பரிசோதித்தனர்?
பதிவு செய்வதற்கு முன் சட்டரீதியான அனைத்து சரிபார்ப்புகளும் செய்யப்பட்டதா? நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதா? நிலத்தின் வழிகாட்டி மதிப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது, யார் கணக்கிட்டது? முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் சரியாக வசூலிக்கப்பட்டதா? ஆகிய விபரங்கள் குறித்து கேட்கப்பட்டது.
தொடர்ந்து ஆவணத்தில் திருத்தங்கள், இடைச்செருகல்கள் அல்லது கைமாற்றங்கள் ஏதேனும் இருந்தனவா, பதிவு செய்யப்பட்ட நிலம் தொடர்பாக இருந்த நீதிமன்ற தடை, அறநிலையத்துறை பரிந்துரை ஏதேனும் இருந்தனவா, சொத்து விற்பவரின் உரிமை சங்கிலி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதா, அறநிலையத்துறை, கோயில் அல்லது அரசு நிலம் என்பதற்கான சந்தேகம் எழுந்த போது ஏன் பதிவு நிறுத்தப்படவில்லை, ஆவணம் பதிவான நாளில் யார், யார் பணியில் இருந்தனர், மேலதிகாரிகளிடமிருந்து ஏதேனும் வாய்மொழி அல்லது எழுத்து உத்தரவு பெறப்பட்டதா என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விற்பனை பத்திரத்தின் அசல், பதிவு நகல், முந்தைய உரிமை பத்திரங்கள், வில்லங்க சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், எப்எம்பி வரைபடம், ஏ-ரிஜிஸ்டர், கிராம நிர்வாக அலுவலர் பதிவுகள், அரசு வழிகாட்டி மதிப்பு பதிவேடு, முத்திரைத்தாள்- பதிவு கட்டண கணக்கீட்டு ஆவணங்கள், கைரேகை பதிவு ஆவணம், புகைப்பட பதிவுகள், பத்திரப்பதிவு அலுவலக தினசரி பதிவு, பதிவு மென்பொருளின் தரவுகள், கோப்பு குறிப்புகள், அலுவலக உள்குறிப்புகள், அறநிலையத்துறையின் கடித பரிமாற்றங்கள், நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இக்குழுவினரின் ஆய்வு மாலை 6 மணிக்கு மேலும் தொடர்ந்தது. இக்குழுவினர் தங்களது ஆய்வுகளின் அடிப்படையில் விதிமுறைகளை மீறி பதிவு செய்யப்பட்டதா, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதா, நிலத்தின் உரிமை குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டார்களா, அதிகாரிகள் அலட்சியம் அல்லது திட்டமிட்ட முறைகேடு செய்தார்களா, ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருந்தால் அதற்கான சான்றுகள், அதிகாரிகள், தனிநபர்கள் இடையே உடந்தை இருந்திருந்தால் அதற்கான ஆதாரங்களுடன் அரசிற்கு அறிக்கை சமர்பிக்க உள்ளனர். இதனடிப்படையில் ஊழியர்கள் மீது துறைரீதியான மேல் நடவடிக்கைகள் இருக்குமென சார்பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* ஆவண சேகரிப்பில் சிபிசிஐடி தீவிரம்
பழநி கோயில் நில முறைகேடு வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று 7வது நாளாக ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பழநி முன்னாள் தாசில்தார் பிரசன்னா, தற்போதைய தாசில்தார் சஞ்சய் காந்தி, பழநி ஆதிதிராவிடர் நலத்துறை சார் ஆய்வாளர் ரத்தினசாமி, ஒட்டன்சத்திரம் வட்ட வழங்கல் அலுவலர் உஷா, நில அளவையர் செல்லதுரை ஆகியோர் நேற்று காலை 11.45 மணியளவில் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தனர்.
காலை முதல் மாலை வரை ஆவணங்களை சேகரிக்கும் பணி நடந்தது. வழக்கிற்கு தேவையான ஆவணங்களை பெற்று எழுத்துப்பூர்வமாகவும், ஆடியோவாகவும் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர். இந்த ஆவணங்களில் தண்டபாணி மடத்தின் பெயர் முதன்முதலில் சூட்டப்பட்டதற்கான ஆவணம், மடத்தின் சொத்து ஆவணங்கள், மடத்தின் சொத்து இருவரின் பெயரில் மோசடியாக மாற்றப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* பழநி டிஎஸ்பி திடீர் மாற்றம்
பழநி டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தவர் செல்வகுமார். சிவகங்கை மாவட்டத்தில் டிஎஸ்பியாக பணிபுரிந்த இவர், கடந்த ஜூலை 2ம் தேதி பழநியில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது. பழநி நில முறைகேடு புகார் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், டிஎஸ்பி மாற்றப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
* நிலத்தை வாங்கியவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நில முறைகேடு தொடர்பான வழக்கில், முன்ஜாமீன் கோரி, நிலத்தை வாங்கிய திருப்பூரை சேர்ந்த வெள்ளத்துரை, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘சம்பந்தப்பட்ட இடம் திட்டமிட்டு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இடத்தை வாங்குவதற்கான பண பரிவர்த்தனை செக் மூலம் நடைபெற்று உள்ளது. ஆனால், வங்கியில் பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறவில்லை. எனவே, கோயில் நிலத்தை திட்டமிட்டு மற்றொருவர் பெயருக்கு மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த முறைகேடு நடந்துள்ளது. விசாரணையை சிபிசிஐடி தீவிரப்படுத்தியுள்ளது. சொத்தின் மதிப்பு ரூ.16 கோடி. ஆனால் மனுதாரர் ரூ.2 கோடி கொடுத்ததாக மனுவில் கூறியுள்ளார்.
அதோடு நிலத்தை பதிவு செய்ய அறக்கட்டளையில் தீர்மானம் நிறைவேற்றிவர்களுக்கு மொத்தமாக ரூ.1 லட்சம் ஜிபே மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் மடத்திற்கு சொந்தமான நிலத்தை எழுதி கொடுத்தவரும், எழுதி வாங்கியவரும் சேர்ந்து போலியான ஆவணங்கள் தயாரித்து இடத்தை அபகரிக்க முயற்சித்துள்ளனர். நிலத்தை பதிவு செய்ய தீர்மானம் நிறைவேற்றிவர்களுக்கு மொத்தமாக ரூ.1 லட்சம் அனுப்பப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டவில்லை. அதேபோல பத்திரப்பதிவு செய்ததற்கான பண பரிமாற்ற விபரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மனுதாரரின் நடவடிக்கை உள்ளது. பதிவாளருக்கு முன்ஜாமீன் வழங்கியதை முன்னுதாரணமாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய வழக்கு என்பது இதில் வேறு.
இந்த நிலத்தின் உண்மையான மதிப்பீடு குறைத்து காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது. விசாரணை நடைபெற்றால் தான் உண்மை தெரிய வரும். இந்த நேரத்தில் முன்ஜாமீன் வழங்குவது விசாரணையை பாதிக்கும் என்பதால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.
