சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில், அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், சில விளக்கங்களை கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
இதுசம்பந்தமாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி விளக்கம் அளித்து, பொதுத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் இந்த விவகாரம், பொதுத்துறை செயலாளரிடம் நிலுவையில் உள்ளது. அதுகுறித்து பொதுத்துறை தரப்பில் எந்த விளக்கமும் இல்லை.
கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலாளரிடம் இந்த கோப்புகள் நிலுவையில் வைத்தது ஏன் என்று அப்போது பொதுத்துறை செயலாளராக பதவி வகித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். அதேபோல், கோப்புகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து தற்போது பொதுத்துறை செயலாளரும், இதுசம்பந்தமாக விளக்கமளித்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் சட்டமன்ற தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஏற்க முடியாது. முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும், கோப்புகள் முடங்கியுள்ளன. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
