கோவை: தேசத்தின் ஒற்றுமையை பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பீளமேடு விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கோவைக்கு வருவதாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தாலும் சரி, அது எனக்கு எப்போதும் தனி மகிழ்ச்சியையும், பூரிப்பையும் தருகிறது. இதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்தும், அதுதொடர்பான பேச்சுவார்த்தை குறித்தும் அதற்குரிய அரசியல் தலைவர்களே பதில் அளிப்பார்கள். மாணவர்கள் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இந்திய தேசம் இன்று, தடம் மாறுகிற சர்வதேச சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது. இதற்கு நமது ஒற்றுமையே முக்கிய காரணம். தமிழ்நாட்டின் தற்போதைய புதிய அரசு செயல்பாடு குறித்து மக்கள் அறிந்துகொள்ள சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். முன்னதாக, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தமிழக கவர்னர் அர்லேகர், அமைச்சர் சம்பத், கோவை கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
