பழநியை தொடர்ந்து காரைக்குடியிலும் அதிர்ச்சி; ரூ.100 கோடி மதிப்பு கோயில் நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிப்பு: கிராம மக்கள் புகாரால் பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகளின் துணையுடன் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக காரைக்குடி நகர் பகுதியில் பல நூறு ஏக்கர் நிலம் உள்ளது.

அதில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே முடியரசன் சாலையில் சர்வே நம்பர் 392ல் பார்ட் 2ல் தற்போது சந்தை மதிப்பின்படி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் 27 சென்ட் இடம் உள்ளது. இதனை தனிநபர் ஒருவர் 1975ல் கோயில் டிரஸ்டியாக இருந்தவர் எழுதி கொடுத்தது போல் போலி கையெழுத்து போட்டு ஆவணம் தயார் செய்து கோயில் டிரஸ்டிகளை பார்ட்டியாக சேர்க்காமல் 2011ல் கோர்ட்டில் உத்தரவு பெற்றுள்ளனர். அதன் மூலம் அந்த தனிநபர் அவரது மனைவி பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கடந்த ஜூன் மாதம் பட்டா மறுதல் செய்ய மனு அளித்துள்ளனர். இதற்கு கோயில் நிலங்களுக்கு என உள்ள தாசில்தாரிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளனர். இதன் மூலம் மாவட்ட வருவாய் அலுவரிடம் இருந்து பட்டா மாறுதல் செய்வதற்கான உத்தரவும் பெற்றுள்ளனர். இந்த உத்தரவின்படி நேற்று கோயில் இடத்தை இரண்டு மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடத் துவங்கினர்.

போலி ஆவணங்கள் மூலம் இந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இடத்தை சுத்தம் செய்யும் தகவல் கிராம மக்கள் மற்றும் பரம்பரை அறங்காவல் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிய வந்துள்ளது. தாசில்தார் ராஜா மற்றும் வடக்கு காவல் துறை இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் என மனு அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுத்தம் செய்யும் பணிகளை நிறுத்தியதோடு இரண்டு மண் அள்ளும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

காரைக்குடி நகரின் மையப்பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரம் தற்ேபாது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சிவகாசியில் கால்நடைத்துறைக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

தற்போது, காரைக்குடியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனிநபர் பட்டா மாற்ற உத்தரவு பெற்று சுத்தம் செய்தது போன்ற தொடர் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சதையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இலுப்பக்குடி கிராம மக்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக காரைக்குடியின் மையப்பகுதியில் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள 2 ஏக்கர் 27 சென்ட் இடத்தை முள்கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வைத்து இருந்தோம்.

இந்த இடத்தை அதிகாரிகள் துணையுடன் தனிநபர் ஒருவர் போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளார். நாங்கள் அமைத்த முள்கம்பி வேலியை சேதப்படுத்தி உள்ளே நுழைந்து இரண்டு மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகளை துவங்கியுள்ளனர். இதுதொடர்பாக வருவாய்துறை அதிகாரி மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தோம். அவர்கள் பணியை தடுத்துள்ளனர். கோயில் செயல் அலுவலர் பட்டா மாறுதல் செய்யக்கூடாது எனஆட்சேபனை தெரிவித்தும் அதனை கண்டு கொள்ளவில்லை.

கோயிலுக்கு என உள்ள தாசில்தார் கோயிலுக்கு சம்பந்தம் இல்லை என தடையில்லா சான்று அளித்தாக கூறுகின்றனர். ஆனால் கோயிலுக்கும் சம்பந்தம் உள்ளதா என இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர், கோயில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் தான் முடிவு செய்ய வேண்டும். கோயில் டிரஸ்ட்டி எழுதி கொடுக்க வாய்ப்பில்லை. போலியாக தயார் செய்துள்ளனர். அப்படியே டிரஸ்டி எழுதி கொடுத்து இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அனுமதியில்லாமல் எந்த சொத்தையும், யாருக்கும் கிரையம் செய்து தர அனுமதியில்லை.

இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் அனுமதியில்லாமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராயாமல் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளின் துணையுடன் இது நடந்துள்ளது. தற்போது வருவாய் அலுவலர்கள், காவல் துறையிடன் முறையிட்டுள்ளோம். சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி உள்ளோம். உரிய முடிவு கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

Related Stories: